காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை தொடங்கிய இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.
இந்தநிலையில்தான், இரண்டு பெண்களில் ஒருவரான சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்திருந்தன. இதைத் தொடர்ந்து, விஜய் ஷா தாம் பேசிய திரித்துக் கூறப்பட்டதாகவும், என்றாலும் இதற்கு 10 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் முறையீடு செய்தார். இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விஜய் ஷாவை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
தனது பேச்சுக்காக அமைச்சர் மன்னிப்பு கோரியிருந்த நிலையில் அதை நிராகரிப்பதாக நீதிபதி சூர்யகாந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் தெரிவித்தனர். உங்கள் மன்னிப்பு தங்களுக்கு தேவையில்லை எனக்குறிப்பிட்ட நீதிபதிகள் இப்பிரச்சினையை சட்டப்படி எப்படி எதிர்கொள்ளவேண்டும் என தங்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டனர்.
பொறுப்பு மிக்க அமைச்சர் பதவியில் இருப்பவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளக்கூடாது என்றும், இந்த பேச்சு குறித்து நாடே தலைகுனிவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுககுழு அமைத்து, வரும் 28ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் மத்திய பிரதேச காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்