Digital Spy
Digital Spypt

கன்டென்ட் கிரியேட்டர்ஸ் (or) டிஜிட்டல் உளவாளிகள்? தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சமூக ஊடக உளவாளிகள்!

இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தான் ISI-க்கு பகிர்ந்ததாக ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சில கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
Published on

- ஜி.எஸ்.பாலமுருகன்

"பயங்கரவாதிகள் எல்லைக்கு வெளியே மட்டுமல்ல; கேமராவிலும் இருக்கிறார்கள்” என்று நினைக்க வைக்கும் வகையில், பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை அதிர வைத்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஹரியானாவைச் சேர்ந்த 33 வயதான பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். 1.37 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட அவர், பாகிஸ்தான் பயணத்தின் போது அந்நாட்டின் உளவுத்துறையுடன் தொடர்பு வைத்து, முக்கிய இந்திய ராணுவ தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் போன்று சமூக ஊடக பயண வீடியோக்கள் பதிவேற்றும் ஒருவர், நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக ஆபத்தாகலாம் என்ற உண்மை, அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

கண்டெண்ட் கிரியேட்டர்ஸ் (or) டிஜிட்டல் உளவாளிகள்?

இன்று யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் "விலாக் வீடியோக்கள்" பெரிதும் உள்ளடக்கமாகி வருகின்றன. நாடு முழுவதும் சஞ்சரிக்கும் இந்த ‘கன்டெண்ட் கிரியேட்டர்கள்’ பலர், முக்கிய சுற்றுலா தளங்கள், பாதுகாப்பு மையங்கள், எல்லை பகுதிகள், ராணுவ நிலைகள் போன்ற "Sensitive Zones" என வகைப்படுத்தப்பட்ட இடங்களை அனுமதி இல்லாமல் படம் பிடித்து வெளியிடுகிறார்கள்.

இவர்களில் சிலர், தவறுதலாக அல்லது “வியூஸ்” நோக்கத்துக்காக இதைச் செய்கிறார்களெனினும், இந்த வீடியோக்கள் எதிரி நாடுகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பு உளவு தகவல்களாக மாறுகின்றன. சிலர் திட்டமிட்டே, பாதுகாப்பு உளவுத் தரவுகளை வெளியிடுகின்ற வழிகளாக சமூக ஊடகங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

Digital Spy
Digital Spy

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், விமான நிலையங்கள், கடற்படை தளங்கள், சுகாதாரக் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய இடங்களை வெளிப்படையாகக் காட்டும் போது, நாட்டின் எதிரிகள் கூட பாதுகாப்பு திட்டங்களை கோடிட்டு கணிக்கச் சாதகமான சூழல் உருவாகிறது.

தேசிய பாதுகாப்பை நேரடியாக தாக்கும் DIGITAL..

இச்சூழலை மேலும் ஆழமாக நோக்கும்போது, இதில் ஒரு புதிய பரிமாணமும் தெரிகிறது. இன்று ஒரு நாளைக்கு ₹2,000 வாடகையில் கிடைக்கும் ட்ரோன்கள், மேலிருந்து முழுமையான காட்சிகளை எடுக்கின்றன. அரசின் முக்கிய கட்டடங்கள், கடற்கரைகள், அணைகள், விமான நிலையங்கள், ராணுவ பயிற்சி தளங்கள், தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற இடங்கள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய கோயில்கள், இரவு நேர காட்சி, பகல் நேர காட்சி என விதவிதமான கோணங்களில் எல்லாவற்றையும், நாட்டின் பாதுகாப்பில் கவலையின்றி அழகாக பதிவு செய்கின்றன.

Digital Scam
Digital Scam

தகவலாக வேண்டியது வெளிப்படையாகி விட்டால், பாதுகாப்பு அடையாளங்கள் தெரிந்துவிடும் அபாயம் மிக அதிகம். குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது வெளிநாட்டு தலைவர்கள் வருகை தரும் இடங்கள், அவர்களுக்கு முன் அந்தப் பயண வீடியோக்களில் வெளிப்படுவது இன்னும் ஆபத்தானது.

இதனை “தகவல் சுதந்திரம்” என புறக்கணிக்க முடியாது. இது தேசிய பாதுகாப்பை நேரடியாக தாக்கும் விஷயம். சமூக ஊடகங்கள் இன்று மக்கள் நம்பும் செய்தி ஊடகங்களாக மாறிவிட்டன. அதனால், துல்லியமான கட்டுப்பாடுகள், சட்டங்கள், அனுமதித் திட்டங்கள் அமைய வேண்டும். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ட்ரோன் வீடியோக்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.

ஒழுங்கு முறை நடவடிக்கை அவசியம்..

ஒரு லட்சம் ஃபாலோயர்களுக்கு மேற்பட்ட யூடியூபர்கள் அரசு தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். முன் அனுமதி இல்லாமல் பொது / பாதுகாப்பு இடங்களில் படமெடுப்பதைச் செய்திருந்தால் கடுமையான அபராதம், விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.

பெரும்பான்மையான இளைய தலைமுறை, சமூக ஊடகங்களின் தகவல்களை மட்டுமே நம்புகிறது. ஆனால் இவற்றில் எது உண்மை? எது போலி? எது நம் எதிரிகளால் தயாரிக்கப்பட்ட உளவு முயற்சி என்பதைப் புரிந்துகொள்ள சில நேரங்களில் பாதுகாப்பு அமைப்புகளுக்கே கடினமாகிறது.

fake digital news
fake digital news

அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர்கள் அளிக்கும் ஒவ்வொரு தகவலும் மக்களை பாதிக்கக்கூடியது. ஆனால் அவர்கள் தரும் தகவல்களில் சமூக பொறுப்பு, நாட்டின் நலன், சட்ட நுணுக்கம் போன்ற அடிப்படை மதிப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

எனவே மத்திய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் ஒழுங்குமுறை சட்டங்களை கொண்டு வரவேண்டும். இது கருத்துச் சுதந்திரத்தை அடக்கும் முயற்சி அல்ல; கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை ஒழுங்கமைக்கும் முயற்சி.

டிஜிட்டல் உளவாளிகளை ஒழிக்க வேண்டும்..

மறைந்த ஜெனரல் பிபின் ராவத் 2020ல் கூறிய “two-and-a-half front war” என்பதன் அர்த்தம் இன்று தெளிவாகிறது. பாகிஸ்தான், சீனா - வெளி எதிரிகள். ஆனால் “0.5” என்பது நாட்டுக்குள்ளேயே இருந்து எதிரிகளுக்கு ஆதரவு தரும் சமூக ஊடக சக்திகள்.

“This is a proxy war. It is dirty. You fight a dirty war with innovation.” - ஜெனரல் பிபின் ராவத்

சமூக ஊடகம்தான் அந்த "Innovation". அது தகவலையும் தருகிறது, எதிரிகளுக்கும் வழிகாட்டுகிறது. இப்போது அரசின் கவனமும், சமூக ஊடக தளங்களின் சுய ஒழுங்கும் ஒன்றாக செயல்பட வேண்டிய நேரம் இது என்பதே, பகல்ஹாம் தாக்குதலும் ஜோதி மல்ஹோத்ரா போன்றோரின் கைது நமக்கு சொல்வன.

model image
model imagex page

நாட்டின் எல்லைகளை காப்பதற்காக வீரமாக போரிடுவது ஒருபுறம்; ஆனால், அந்த எல்லைகளையே யாரேனும் ட்ரோனில் படம் பிடித்து YouTube-இல் ஏற்றும் சூழ்நிலை மறுபுறம் உருவாகி விட்டது. இந்த மாற்றம் எவ்வளவு மௌனமாக, வேகமாக வந்ததோ... அதைவிட வேகமாக அதற்கு எதிரான சட்டஒழுங்கு அமைக்கப்பட வேண்டும்.

தகவல் என்பது ஒரு ஆயுதம். ஆனால் அது கையில் வைத்திருப்பவர் நாட்டுக்குள் இருக்கிறாரா, நாட்டுக்கு எதிராக இருக்கிறாரா என்பதை அறிவதே நம் பாதுகாப்பின் முதல் கேள்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com