மத்திய பிரதேசத்தில் ராணி அகல்யா பாயின் 300ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி.
அதில் பேசிய பிரதமர் மோடி, “ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்திய வரலாற்றின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும். நமது படைகள் எதிரி நாட்டில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழித்தன.
இது பாகிஸ்தான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத ஒன்று. பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவிற்கு எதிரான மறைமுகப் போர் இனி தொடராது என்பதை ஆபரேஷன் சிந்தூர் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
140 கோடி இந்தியர்களின் முதல் தீர்மானம். பாகிஸ்தானின் ஒவ்வொரு துப்பாக்கித் தோட்டாக்களுக்கு நம்மிடமிருந்து பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளது. சிந்தூர்(செந்தூரம்) இந்தியக் கலாசாரத்தில் ஒருங்கிணைந்தது. இது பெண்களின் வீரத்தைக் குறிக்கிறது. ராமரின் மீது தீவிர பக்தி கொண்ட ஹனுமான் தன் மீது பூசிக்கொண்டதும் செந்தூரம்தான். பூஜைகளின் போது சிந்தூர் வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வீரத்தின் அடையாளமாக சிந்தூர் மாறியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நமது வளமான நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாக இருந்தாலும், எதிரிகளை அவர்களின் இடத்திலேயே அழித்துவிட்டோம். நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, எல்லை தாண்டிய நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, நமது நாட்டின் பெண்கள் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த கேடயமாக உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.