கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வருகின்றன. நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது, இதனால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வருகின்றன. நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது. இதனால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன. இது சிலரால் ’நவம்பர் புரட்சி’ என்று குறிப்பிடப்படுகிறது. துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் விசுவாசமான எம்.எல்.ஏக்கள் சிலர், டெல்லிக்குப் படையெடுத்து, இதுதொடர்பாக தலைமையிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், தற்போதைக்கு மாற்றமில்லை என தலைமை உறுதியாகத் தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரம் கர்நாடக காங்கிரஸ் அரசில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, டிசம்பர் 1 நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னர் முதலமைச்சரை மாற்றுவது குறித்து காங்கிரஸ் உயர்மட்டம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்புகொள்ள முயன்றார். ஒரு வாரமாக அவரைத் தொடர்புகொள்ள முயன்ற நிலையில், தற்போது டி.கே.சிவகுமாருக்கு ராகுல் காந்தி பதிலளித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவில் நிலவும் தலைமைப் பிரச்னை குறித்து விவாதிக்க மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டவர்களின் கூட்டத்தை புதுடெல்லியில் கூட்டப்போவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், டி.கே.சிவகுமார், "ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவது உலகின் மிகப்பெரிய பலம்!" எனத் தலைப்பிட்டு, எக்ஸ் தளத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தில், "சொல் சக்தியே உலக சக்தி... உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும். வார்த்தை சக்தியே உலக சக்தி" என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சித்தராமையா முதலமைச்சரான மே 2023இல் நடந்ததாகக் கூறப்படும் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் உயர் கட்டளைக்கு ஒரு கூர்மையான நினைவூட்டலாக இந்த வரி விளக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பதிவு வைரலான நிலையில், ”தாம் அதுகுறித்து எந்தப் பதிவையும் வெளியிடவில்லை என்றும் அது போலியானது” என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சித்தராமையா, இன்று அதிகாலையில், தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான தலைவர்களான ஜி.பரமேஸ்வரா, சதீஷ் ஜர்கிஹோளி, எச்.சி. மகாதேவப்பா, கே.வெங்கடேஷ் மற்றும் கே.என்.ராஜண்ணா ஆகியோருடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொருபுறம், ”சிவகுமாரை முதல்வராக ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று சித்தராமையாவின் நெருங்கிய உதவியாளரான உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், சித்தராமையா முகாமில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில், சித்தராமையாவின் மற்றொரு உதவியாளரான ஜமீர் அகமது கான், 2028 வரை உயர் பதவி காலியாக இல்லை என்று உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, முதல்வர் சித்தராமையாவின் வலதுகரமாகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் சதீஷ் ஜர்கிஹோலியும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, சிவகுமார் கேபிசிசி தலைவர் மற்றும் டிசிஎம் பதவிகளையும் தியாகம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வெளிப்படையாக எதுவும் அறிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.