உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13ஆம் தேதி முதல் மஹா கும்பமேளா நடைபெறவுள்ளது. தேசத்தின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்போது முதலே அங்கு மக்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக ஐராவத் காட் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய யோகி ஆதித்யநாத், “மசூதி என்று அழைப்பதை நாம் நிறுத்தும் நாளில், மக்கள் அங்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். அத்தகைய இடங்களில் வழிபாடு செய்வது கடவுளுக்கு ஏற்புடையதல்ல. அது, இஸ்லாமியக் கொள்கைகளுடன் சார்ந்து போகாது. கடவுள் ஏற்கவில்லை என்றால், நாம் ஏன் இத்தகைய வீண் வழிபாட்டில் ஈடுபட வேண்டும்? சனாதன தர்மத்தைப் போல, கோயில்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வழிபாட்டிற்கான கட்டமைப்பை இஸ்லாம் கட்டமைக்கவில்லை. சனாதனிகள் கோயில்களுக்குச் செல்வது வழிபாட்டிற்காகவே. இஸ்லாமி நடைமுறைகளுக்காக அல்ல. எனவே, எந்தவொரு கட்டமைப்பையும் மசூதி என்று அழைப்பது தேவையற்றது மற்றும் எதிர்மறையானது. புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைத் தழுவி முற்போக்குச் சிந்தனையுடன் முன்னேற வேண்டிய தருணம் இது. கடந்தகால சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து வக்ஃப் வாரியம் உரிமை கோரும் நிலத்தில் மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்வது குறித்துப் பேசிய அவர், “பிரயாக்ராஜில் உள்ள இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கும்பம் நடைபெற்று வருகிறது. இப்போது யாராவது இந்த நிலம் வக்ஃப் வாரியத்தின் சொத்து என்று சொன்னால், அது வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானதா அல்லது நில மாஃபியாக்களுக்குச் சொந்தமானதா என்று நாம் கேட்க வேண்டும்? இதுபோன்ற தீங்கிழைக்கும் போக்குகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு முற்றுப்புள்ளை வைப்போம்” எனத் தெரிவித்த அவர், “மகா கும்பமேளாவில் அதன் நெறிமுறைகள் மற்றும் அதன் நித்திய மரபுகளை மதிக்கிறவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலைகளில் முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பல தனி நபர்கள், இன்னும் இந்தியாவின் பாரம்பரியங்களில் பெருமை கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பாரம்பரியத்தாலும் பக்தியாலும் சங்கத்தில் புனித நீராட வந்தால் அவர்களுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. ஆனால், தீங்கிழைப்பவர்கள் அதில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், இந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாடி அதை ஆக்கிரமிக்க முற்படுபவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனவும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக, மகாகும்ப மேளாவில் முஸ்லிம்கள் பெருமளவில் இந்து மதத்திற்கு மாற்றப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை நிறுத்துமாறு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மெளலானா முப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.