உ.பி. மகா கும்பமேளாவில் முஸ்லிம்களை மதமாற்ற திட்டமா? முதல்வர் ஆதித்யநாத்-க்கு வந்த கடிதம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 வரை மஹா கும்பமேளா நடைபெறவுள்ளது. தேசத்தின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்போது முதலே அங்கு மக்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், மகாகும்ப மேளாவில் முஸ்லிம்கள் பெருமளவில் இந்து மதத்திற்கு மாற்றப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை நிறுத்துமாறு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மெளலானா முப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படவுள்ளார்கள் என்று எங்கிருந்தோ தனக்கு தகவல் வந்ததாகக் கூறும் பரேல்வி, யோகிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ”உத்தரப்பிரதேச அரசு மதமாற்றத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், கும்பமேளாவின்போது முஸ்லிம்களை மதம் மாற்றினால் அந்த மதமாற்றம் சட்டத்தின் வரம்பிற்குள் வரும். இதன் காரணமாக நாடு மற்றும் மாநிலம் முழுவதும் பதற்றம் வர வாய்ப்புள்ளது.
எனவே, அந்தச் சட்டத்தைத் தடைசெய்வது அவசியம். மேலும், கும்பமேளா ஒரு சமய நிகழ்வு என்றும், அதை சிறப்பாகவும் அமைதியாகவும் முடிக்க வேண்டும்” என்றும் அதில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதில், “இங்கிருந்து வரும் செய்தி சமுதாயத்தை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அதை உடைக்கும் சக்தியாக இருக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
அனைத்திந்திய அகாரா பரிஷத்தின் தலைவரான மஹந்த் ரவீந்திர பூரி, சனாதனத்தின் பிடியில் திரும்ப ஏங்கும் பல முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறிய செய்திகளில் இருந்து இந்த மதமாற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியதாகக் கூறப்படுகிறது.