donkey certificate  AI
இந்தியா

’செவிலியர்’ ஆன கழுதை..? ஆன்லைன் போர்டலை அதிர வைத்த சம்பவம்!

கழுதை புகைப்படம், முழுமையற்ற ஆவணங்கள் இருந்தும் தற்காலிக நர்சிங் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டதாக NSUI துணைத் தலைவர் ரவி பர்மார் குற்றச்சாட்டு

PT WEB

செய்தியாளர் - M. மீரா

மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் பதிவு தொடர்பான ஆன்லைன் நடைமுறை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுதையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நர்சிங் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம், விண்ணப்பதாரர்களின் அடையாளம் மற்றும் கல்வித் தகுதிகள் முறையாக சரிபார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச நர்ஸ் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் போர்ட்டரில், விண்ணப்பதாரரின் ஆவணங்கள் மற்றும் அடையாளம் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதைச் சோதிப்பதற்காக ஒரு முயற்சியை மேற்கொண்டதாக NSUI மாநில துணைத் தலைவர் ரவி பர்மார் தெரிவித்துள்ளார்.

Ravi Parmer

அவரது கூற்றுப்படி, சோதனைக்காக கழுதையின் புகைப்படம் பதிவேற்றப்பட்டு அதனுடன், உண்மையான நர்சிங் கல்வித் தகுதியை நிரூபிக்காத ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்டது. பின்பு, ஆன்லைன் அமைப்பு நர்சிங் பதிவுச் சான்றிதழை உருவாக்கியதாக பர்மார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய பர்மார், ஒரு கழுதைக்கே பதிவுச் சான்றிதழ் கிடைக்க முடிந்தால், உண்மையான விண்ணப்பதாரர்களின் அடையாளம் மற்றும் ஆவணங்கள் எந்த அளவுக்கு சரிபார்க்கப்படுகின்றன” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மத்தியப் பிரதேச நர்ஸ் பதிவு கவுன்சில் தலைவர் டாக்டர் வேணு குஷ்வாஹா விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் முறையில் வழங்கப்படுவது தற்காலிகப் பதிவு சான்றிதழ் (Provisional Certificate) என்றும், பின்னர் ஆவணங்கள் மற்றும் கல்வித் தகுதிகள் சரிபார்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

donkey certificate

தவறான தகவல்கள், போலியான புகைப்படங்கள் அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு பெற முயற்சிப்பது மோசடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து, கூடுதல் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக ஆன்லைன் பதிவு செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.