வாடிக்கையாளரை சுமந்து செல்லும் ஓட்டுநர்
வாடிக்கையாளரை சுமந்து செல்லும் ஓட்டுநர் x தளம்
இந்தியா

‘இது கொடுஞ்செயல்!’- தீர்ந்த பெட்ரோல்.. இறங்க மறுத்த பயணி; அமரவைத்து தள்ளிச் சென்ற Rapido ஓட்டுநர்!

Jayashree A

இன்றைய அவசரகாலத்தில் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சரி, முக்கிய வேலையாக வெளியில் செல்பவர்களும் சரி, பேருந்துக்கோ அல்லது ரயிலுக்கோ காத்திருக்க விரும்புவதில்லை. ஆட்டோ அல்லது கார் என்று தங்களது வசதிக்கேற்ப கிடைக்கின்ற வாகனத்தில் செல்வதை விரும்புகிறார்கள்.

சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் காலை நேரத்தில் rapido, ola போன்ற தனியார் ஆப் மூலம் ஆட்டோ, கார் அல்லது பைக் மூலம் டாக்ஸி புக் செய்து அலுவலகங்கள் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவரச தேவைகளுக்கு இதுபோன்ற சேவைகள் மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற மோசமான rapido பயணம் தொடர்பான வீடியோ ஒன்று நேற்று இணையதளத்தில் வைரலாகி பார்த்த பலரது இதயத்தையையும் நொறுக்கிவிட்டது.

அந்த வீடியோவில், rapido ஓட்டுநர் தன்னுடைய பைக்கை தள்ளிக் கொண்டு செல்கிறார். அவர் மட்டும் வண்டியை தள்ளிக் கொண்டு சென்றிருந்தால் பிரச்னையில்லை. அவர் தன்னுடைய வாடிக்கையாளரை பின்னால் அமர வைத்தபடி வண்டியை தள்ளி செல்கிறார்.

நடந்தது என்ன?

ஹதராபாத்தை சேர்ந்த அந்த வாடிக்கையாளர் ராபிடோவில் பயணம் செய்வதற்காக புக் செய்துள்ளார். அவர் புக் செய்த பைக்கும் வந்துள்ளது. அவர் பைக்கில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். ஆனால், பைக் ஆனது எரிபொருள் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. இதனால், ராபிடோ பைக்கை ஓட்டி வந்த நபர் வண்டியில் கீழே இறங்கினார். அத்துடன், வாடிக்கையாளரையும் கீழே இறங்குமாறும் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நடந்து செல்லலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த வாடிக்கையாளர் கீழே இறங்க மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் ராபிடா டிரைவர் கேட்டுக் கொண்ட போதும் அதை நிராகரித்துள்ளார். இதனையடுத்து, வேறு வழியில்லாமல் அவரை அமர வைத்துக் கொண்டே தனது பைக்கை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார் அந்த ஓட்டுநர். இதனை அவ்வழியாக சென்று ஆட்டோ டிரைவர் இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை x தளத்தில் அவர் பதிவிட்டதை அடுத்து அது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோ வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பான விவாதமும் எழுந்துள்ளது.

வைரலான வீடியோ எழுந்த விவாதம்!

இந்த சம்பவத்தில் இருவர் தரப்பிலும் தவறு இருப்பதாக வாதங்கள் முன் வைக்கப்படுகிறது. வண்டியை புக் செய்த பயனாளர் வண்டி நடுவழியில் நின்ற கோபத்தினால் அவர் வண்டியை விட்டு இறங்காமல் இருந்திருக்கலாம்.

பயனரிடம் சண்டையிட விரும்பாமல் தன்னுடைய தவறை உணர்ந்து வண்டியில் அவரை வைத்து தள்ளிக்கொண்டு ஓட்டுநர் சென்றிருக்கலாம் என்று சிலர் கருத்துக்களை முன் வைத்தனர்.

இது போன்ற சூழ்நிலையில், டிரைவர் தனது சவாரிக்கு முன்னதாக வண்டியின் நிலை குறித்தும், அதில் இருக்கும் எரிபொருள் அளவு குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டியது தான். ஆனால், அதற்கு தண்டனையாக இப்படி பைக்கில் அமர்ந்தபடி தன்னை வைத்து தள்ளி செல்ல வற்புறுத்துவது சரியான அணுகுமுறையா என்பது கேள்விக்குறியே!