shahrukh khan, ajay devgn, tiger shroff எக்ஸ் தளம்
இந்தியா

பான் மசாலா தவறான விளம்பரம் | ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப்புக்கு நோட்டீஸ்!

பான் மசாலா குறித்து தவறான விளம்பரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு ஜெய்ப்பூர் நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் ஆஜராக உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Prakash J

பான் மசாலா, குட்கா உள்ளிட்ட விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் நடிகர்கள் அதைப் பெரிதாய் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில், பான் மசாலாவுக்கு எதிராக வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால், ஜெய்ப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில், ”பான் மசாலாவின் ஒவ்வொரு தானியத்திலும் குங்குமப்பூ சக்தி இருப்பதாகக் கூறி, மக்களை வாங்க வைக்கின்றனர். குங்குமப்பூ ஒரு கிலோ 4 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஆனால் பான்மசாலா வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, குங்குமப்பூவை பான்மசாலாவில் கலப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. குங்குமப்பூவின் வாசனையைக்கூட அதில் சேர்க்க முடியாது. குங்குமப்பூவில் இருக்கும் குட்கா என்று கூறி விமல் பான் மசாலாவை மக்களை வாங்க வைக்கின்றனர். குங்குமப்பூ என்று கூறி விளம்பரப்படுத்துவதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர். அதனால் இந்த பான்மசாலாவை தயாரிக்கும் ஜெ.பி.இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். பான் மசாலா, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும்.

பாலிவுட் நடிகர்கள்

ஆனால், பான் மசாலா நிறுவனம் பல கோடி மதிப்பிலான வணிகம் செய்கிறது. பான் மசாலா குறித்து தவறான தகவல்களைக் கூறி, விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலனைக் காக்க, உடனடியாக அமல்படுத்தும் வகையில் பான் மசாலா மற்றும் அது தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் ஷாருக் கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் மற்றும் ஜெ.பி. இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விமல் குமார் அகர்வால் ஆகியோர் மார்ச் 19ஆம் தேதியில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஆஜராகவில்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 30 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.