murli manohar joshi supports delhi students protest web
இந்தியா

’வேதனை அளிக்கிறது..’ டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஆதரவு.!

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் வேதனை அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர் போராட்டம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர், முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி திறந்த ஆதரவு தெரிவித்துள்ளார். தேர்வு முறையில் உள்ள முறைகேடுகள் குறித்து மாணவர்களின் கவலை நியாயமானது என கூறிய அவர், அவர்களை சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல் இரக்கத்துடன் அணுக வேண்டும் என்று அரசை கேட்டுக்கொண்டார். போலீஸ் தடியடி, பெண்மாணவர்கள்மீது நடந்த கொடுமை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய கல்வி அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, புதுடெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் இளைஞர்களுக்கு பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் மிக மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு தங்களது சொந்த அரசுக்கு எதிராக குரல்கொடுத்துள்ளது பா.ஜ.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது "X" சமூகவலைத்தள பக்கத்தில்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள 92 வயதானபா.ஜ.க. மூத்த தலைவர் ஜோஷி, மாணவர்களின் போராட்டத்தைக் கையாண்ட விதம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, அவர்களின் நியாயமான குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளம் மாணவர்கள் பல நாட்களாக வீதிகளில் தங்கியிருப்பது "வேதனைஅளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு ரத்து

தேர்வு முறை குறித்து அவர்களுக்கு இருக்கும் கவலைகள் முற்றிலும் நியாயமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த விவகாரத்தை வெறும் "சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக" மட்டும்பார்க்காமல், அரசு மாணவர்களிடம் இரக்கத்துடனும், இந்த முறைக்கேடுகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் உண்மையான நோக்கத்துடனும் அணுக வேண்டும் என்று ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட போலீஸ் தடியடியைஅவர் கடுமையாக விமர்சித்தார். மாணவிகள் உள்ளிட்ட இளம்தலைமுறையினரை பாதுகாப்புப் படையினர் கொடூரமான முறையில் கையாண்டதைக் கண்டுதான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறினார்.

பா.ஜ.க.வின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் முன்னாள் மனிதவள மேம்பாட்டு (கல்வி) அமைச்சராகவும் இருந்த முரளி மனோகர் ஜோஷி, தற்போதைய பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து விலகி பொதுவெளியில் குரல் கொடுத்துள்ளது, மாணவர்களின் போராட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளது.