Selfie with Putin Instagram - Raul the rockstar
இந்தியா

ரஷ்ய அதிபர் புதினுடன் செல்ஃபி! வைரலாகும் இந்தியாவின் AI சிறுவன்!

புதினுடன் செல்ஃபி: ரவுலின் சாதனைக்கு உலகம் பாராட்டு!

PT WEB

17 வயது ரவுல் ஜான் அஜு, ரஷ்ய அதிபர் புதினுடன் செல்ஃபி எடுத்து, 'AI Journey 2026' மாநாட்டில் பங்கேற்றார். 'இந்தியாவின் AI சிறுவன்' என அழைக்கப்படும் இவர், 9 வயதில் AI கற்றுத் தொடங்கி, சர்வதேச அளவில் கவனம் பெற்ற இளம் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார்.

செய்தியாளர் - M.மீரா

17 வயது இளைஞர் ரவுல் ஜான் அஜு (Raul Jon Aju), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சாதித்து வரும் இவர், 'இந்தியாவின் AI சிறுவன்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய 'AI Journey 2026' என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் ரவுல் பங்கேற்றார். இந்த மாநாட்டின் முக்கிய அமர்வு முடிந்த பிறகு, ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், சிறுவயதில் பொழுதுபோக்கிற்காக வீடியோக்களை உருவாக்கிய தன்னால், 17 வயதில் ஒரு நாட்டின் அதிபரைச் சந்திக்க முடியும் என்று கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரவுல் உருவாக்கிய 'ThinkCraft' தளத்தை ரஷ்யத் தூதரகமும் பாராட்டியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரவுல் ஜான் அஜு, கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் AIRealm Technologies நிறுவனத்தை நடத்தி வருகிறார். 9 வயதில் AI தொழில்நுட்பத்தைக் கற்கத் தொடங்கிய இவர், தனது 17 வயதில் சர்வதேச அளவில் கவனம் பெற்ற இளம் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு AI பயிற்சியும் வழங்கியுள்ளார்.

குறிப்பாக, ரவுலின் தந்தையே அவரது நிறுவனத்தில் பணியாற்றி மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலேயே AI துறையில் சாதித்து வரும் ரவுலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.