தங்கம் fb
இந்தியா

Digital Goldஇல் முதலீடா.. எச்சரிக்கும் SEBI.. ஏன் தெரியுமா?

ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது.

Prakash J

ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் உளவியல்ரீதியாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின் தாக்கம் மற்றும் தங்கத்தில் அதிகளவிலான முதலீடு காரணமாக இந்த விலையேற்றம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம், அது எவ்வளவு விலை உயர்ந்தாலும் அதை வாங்கிக் குவிப்பதில் மக்களுக்கு ஆர்வம் ஒருபோதும் குறைவதே இல்லை. இதனால், மக்கள் பலரும் தங்கத்தில் பல வழிகளில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக ஆபரணம், நாணயம், கட்டிகள், டிஜிட்டல் தங்கம், ETF, கோல்ட் Fund, தங்க பத்திரங்கள் (SGB)எனப் பல வகைகளில் தங்க சேமிப்புகள் நடைபெறுகின்றன.

தங்கம்

இதில் பொதுமக்கள் தற்போது மொத்தமாக பணம் கொடுத்து தங்கம் வாங்குவது எளிதானதல்ல என்கிற நிலையில், ஆன்லைன் தளங்களில் டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம் போன்ற முதலீடு திட்டங்களை நாடி வருகின்றனர்.

டிஜிட்டல் கோல்டு என்பவை டிஜிட்டல் வடிவில் இருக்கும் தங்கம் என குறிப்பிடலாம். அதாவது, நமக்கு தேவைப்படும் போது இதனை விற்று பணமாக்கலாம் அல்லது தங்கமாக மாற்றி பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ஆயிரம் ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லை என செபி எச்சரித்துள்ளது.

SEBI

கட்டுப்பாடற்ற ஆன்லைன் தளங்களால் வழங்கப்படும் ’டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம்’ தயாரிப்புகளில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றது எனவும் செபி கூறியுள்ளது. தங்கப் பத்திரங்கள் அல்லது சரக்கு வர்த்தகப் பொருட்களின்கீழ் டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மூலம் வாங்கப்படும் டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பானது இல்லை எனவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் செபி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.