செபி தலைவர் நீட்டிப்பு இல்லை.. விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்குமுறைபடுத்தும் அமைப்பாக செபி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்போது மதாபி பூரி புச் செயல்பட்டு வருகிறார். இவருடைய பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் செபி தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தற்போதைய தலைவர் மதாபிக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது. செபி அமைப்பில் இதற்கு முன் தலைவராக இருந்த பலரும் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள நிலையில், மாதவிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மதாபி பூரி புச் தன் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்வதாக சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
அதானி முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் மதாபி மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், செபி தலைவர் பதவி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக, செபி தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரைதான் இருக்கும். ஆனால், இந்த முறை ஐந்து ஆண்டுகள் வரை பதவிக்காலம் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. செபி தலைவராக தேர்வு செய்யும் நபருக்கு மத்திய அரசு செயலாளர் பதவியில் இருக்கும் நபருக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு 5,62,500 ரூபாய் சம்பளமாக கிடைக்கும். இதுதவிர, வீடு மற்றும் கார் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள் பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
தற்போது செபி தலைவராக இருக்கக்கூடிய மதாபி பூரி புச், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி செபி தலைவராக பதவி ஏற்றார். அதற்குமுன்பு 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 18 முதல் 2017 மார்ச் 1 வரை செபி தலைவராக யு.கே.சின்கா மொத்தம் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். அதேபோல 2017 மார்ச் 1 முதல் 2022 பிப்ரவரி 28 வரை செபி தலைவராக ஐந்தாண்டுக் காலம் அஜய் தியாகி பதவி வகித்தார். தியாகி பொறுப்பேற்பதற்கு முன்பு செபியின் தலைமைப் பொறுப்பில் இருந்த யுகே சின்ஹாவுக்கும் அரசு நீட்டிப்பு வழங்கியது.