உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் pt
இந்தியா

"லஞ்சம் வாங்குவது MP, MLA-வின் உரிமை அல்ல" - உச்சநீதிமன்றம்

ஜெனிட்டா ரோஸ்லின், நிரஞ்சன் குமார்

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பையோ நீதிமன்றத்தையோ சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் விமர்சித்து பேசினால், அந்நேரத்தில் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. இதை அரசியல் சாசனத்தின் 105 (2),194 (2) ஆகிய பிரிவுகள் விவரிக்கின்றன. இந்த சட்டப்பிரிவுகளை எந்த அளவிற்கு பயன்படுத்தப்படலாம் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

1988-ல் பிரதமராக இருந்த பி.வி நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில், கூட்டணியில் இருந்து கொண்டே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், “எந்த ஒரு சம்பவம் தொடர்பாகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி எழுப்ப முடியாது” என்ற தீர்ப்பு வந்தது.

ஆனால், தற்போது இந்த தீர்ப்பின்மீது உச்சநீதிமன்றத்தில் 7 நிதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரணை நடத்தி உள்ளது. அதன்மீது அதிரடி தீர்ப்பொன்றையும் பிறப்பித்துள்ளது.

அதன்படி, “நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்ற புகார் எழுந்தால் நிச்சயம் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். லஞ்சம் பெறுவது என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் குற்றம். ஆகவே இதில் பாராளுமன்றம், சட்டமன்றம் கொடுத்துள்ள சலுகைகளை இவர்கள் பயன்படுத்தி கொள்ள இயலாது.

ஆகவே மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் பெறும் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.எம்.பி, எம்.எல்.ஏக்கள் லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுக்கப்பட்டதல்ல” என்று தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் வாக்களிப்பதற்காக லஞ்சம் வாங்குகிறார் என்றால் அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.