வங்கிக் கணக்கே இல்லாத எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவருவதற்காக BSBD என அழைக்கப்படும் அடிப்படைச் சேமிப்புக் கணக்கு திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கணக்கை தொடங்க குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்பதால் பெரும் வரவேற்பை பெற்றது.
மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரம்பு இன்றிப் பணம் டெபாசிட் செய்யும் வசதி, ஏடிஎம் பராமரிப்புக் கட்டணம் கிடையாது போன்ற சலுகைகள் இந்த BSBD திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. SBI வங்கியை பொறுத்தவை BSBD திட்ட சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் 5 முறை எந்தவித கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்காமல் என்ற விதி ஏற்கனவே இருந்தது.
இந்த நிலையில், இந்த விதியை மாற்றி, மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்றும், ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா 15 ரூபாய் மற்றும் அதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்றும் SBI வங்கி அறிவித்துள்ளது.
அதே நேரம் UPI, NEFT, RTGS, IMPS போன்ற அனைத்து வகையான இணையவழி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் வழக்கம்போல எந்தவிதக் கட்டணமும் இன்றி, அவை முற்றிலும் இலவசமாகத் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.