sai pallavi ramayana movie / ramayana promo function / istagram / kollywoodcinema@x
இந்தியா

நீங்க சீதையாக செட் ஆகல! கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்! சாய்பல்லவி ஓபன் டாக்!

ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள சாய்பல்லவியின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து நடிகை சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார்.

PT WEB

சீதையாக சாய்பல்லவியின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகை, மற்றவர்களின் கருத்துகளை மன உறுதியுடன் எதிர்கொள்வது அவசியம் என தெரிவித்தார். பெண்களின் கதாபாத்திரங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்பதையே தன் எதிர்பார்ப்பு என கூறியுள்ளார்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள சாய்பல்லவியின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து நடிகை சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். அப்படி சாய்பல்லவி கூறியது என்ன? ரசிகர்களின் விமர்சனங்களுக்கு அவர் அளித்த பதில் என்ன? விரிவாகப் பார்க்கலாம்...

Sai Pallavi

இந்திய இதிகாசங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் ராமாயணத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ராமாயணம். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே நடிகர்களின் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, சீதையாக சாய்பல்லவி தேர்வு செய்யப்பட்டபோது, அவர் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பாரா என்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, திரைப்படம் வெளியான பிறகும் சாய்பல்லவியின் தோற்றம் மற்றும் சீதையின் கதாபாத்திரச் சித்தரிப்பு தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, சீதை எவ்வாறு இருக்க வேண்டும், அவரது அழகு மற்றும் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில்,தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாய்பல்லவி, தனக்கு எதிராக எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் தனக்குத் தெரியாமல் இல்லை என்றும், சீதா எவ்வளவு அழகாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருவதைத் தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற விமர்சனங்களால் ஒருவரது மன உறுதியும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுமானால், அதனைச் சரிசெய்து மனதளவில் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களின் கருத்துகள் அவரவர் விருப்பம் என்றும், அவற்றை எதிர்கொள்ளும் மன உறுதி தனக்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ramayana part 1

மேலும், திரைப்படங்களில் பெண்களுக்கான கதாபாத்திரங்கள் குறித்து பேசிய சாய்பல்லவி, வெறும் கவர்ச்சிக்காகவோ அல்லது அழகுக்காகவோ மட்டுமே பயன்படுத்தப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு கதாபாத்திரத்தில் வலிமையும், அதற்கான முக்கியத்துவமும் இருக்க வேண்டும் என்பதையே தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் சில வாய்ப்புகளைத் தவிர்த்து, தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களுக்காகக் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு, ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடித்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காகத் தனது தோற்றத்தையோ தன்னம்பிக்கையையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்ற அவரது கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.