சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு pt desk
இந்தியா

மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு: ஹரிவராசனம் பாடி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாட்களாக தொடர் விழாக்கோலம் பூண்டிருந்த இந்த ஆண்டின் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் இனிதே நிறைவுற்றது. இதையடுத்து பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம்:

பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 15ம் தேதி கோலாலமாக துவங்கியது. 41 நாட்களுக்குப் பின் டிசம்பர் 26ல், திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 451 பவுன் தங்க அங்கி அணி அணிவித்த ஐயப்பனுக்கு பிரதான மண்டல பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

திருவாபாரணங்கள் அணிந்து அரச கோலத்தில் காட்சியளித்த ஐயப்பன்:

கடந்த ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் பிரதான "மகர சங்ரம பூஜை", "மகர விளக்கு பூஜை", பந்தள அரசன் வழங்கிய திருவாபரணங்களுடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு "மகா தீபாரதனை", பொன்னம்பல மேட்டில் "மகரஜோதி" தரிசனம் ஆகியன நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து ஜனவரி 14 முதல் பந்தள மகாராஜா வழங்கிய திருவாபாரணங்கள் அணிந்து அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை கடந்த 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐயப்பனுக்கு மிகவும் பிடித்த நெய் அபிஷேகம் ஜனவரி 18 ஆம் தேதி நிறைவடைந்தது.

52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம்:

தினசரி சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சில நாட்களில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியது. ஜனவரி 18 ஆம் தேதி வரை 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பூஜை காலத்தை விட 10 லட்சம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

பந்தளம் அரச குடும்பத்தினர் தரிசனம்:

இந்நிலையில், நேற்று (ஜனவரி 19 ஆம் தேதி) இரவு 11 மணிக்கு பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்து 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. அதே நேரம் மாளிகாப்புரத்தில் வன தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஸ்ரீ குருதி நடந்தது. இன்று (ஜனவரி 20 ஆம் தேதி) காலை 5:30 மணிக்கு பந்தளம் அரச குடும்ப தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. கணபதி ஹோமத்திற்குப் பின் திருவாபரண திருப்பலி ஊர்வலம் நடந்தது.

ஹரிவராசனம் பாடி நடை அடைப்பு:

அரச குடும்ப தரிசனத்திற்கு பின், 6:30 மணிக்கு மேல்சாந்தி ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஹரிவராசனம் பாட கோயில் நடை சார்த்தப்பட்டது. ஐயப்பனுக்கு அணிவித்து அழகு பார்த்த "திருவாபரணங் "களும் கோயில் சாவியும் 18ம் படி இறங்கி வந்து பந்தள அரச குடும்ப பிரதிநிதி "திருக்கேட்ட திருநாள் ராஜராஜ வர்மா" விடம் ஒப்படைக்கப்பட்டன. இத்துடன் பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டலம் மற்றும் மதுரை விளக்கு பூஜை காலம் இனிதே நிறைவுற்றது.