செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில், மலையாள மாதத்தின் 'எடவம்' மற்றும் தமிழ் மாதத்தின் 'வைகாசி' மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து, யோக நித்திரையில் உள்ள ஐயப்பனை எழுப்பி தீபம் ஏற்றினார். இதைத் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் படர்த்தியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமும், நெய் அபிஷேகம் துவங்கி வழக்கமான பூஜைகளுக்குப் பின் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி திருநடை அடைக்கப்படும். வழக்கமான ஐந்து நாள் மாதாந்திர பூஜைக்குப் பின் மே 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சார்த்தப்படும். பக்தர்கள், sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.