russia attack x page
இந்தியா

ஒரே இரவில் 479 ட்ரோன்கள்.. 20 ஏவுகணைகள் | உக்ரைனின் 'ஸ்பைடர்வெப்' தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி

ஒரே இரவில் ரஷ்யா 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் ராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் முதன்முறையாக உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் TU-95, TU-22M, A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் உள்பட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

russia attack

உக்ரைனின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ரஷ்யா பதிலடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார். அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் 9 நகரங்களுக்கு ரஷ்யா குறி வைத்தது. இது கடந்த மூன்று ஆண்டுகால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் நேற்றிரவு உக்ரைன் மீது 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் ட்ரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை ட்ரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய எல்லைக்குள் உள்ள விமானத் தளங்கள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பகுதியை தங்கள் படைகள் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது, உக்ரைனின் ட்ரோன்கள் மற்றும் அவற்றை சேமித்து வைத்துள்ள இடங்களை தங்கள் பீரங்கி படைகள் தொடர்ந்து தாக்கி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யாவின் தகவல்களை உக்ரைன் மறுத்துள்ளது. தங்கள் நாட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரஷ்யா பொய் தகவல்களை பரப்புவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.