டெல்லியில் பஞ்சீல் பாலக் இன்டர் காலேஜ் ஆடிட்டோரியத்தில் சுருச்சி பிரகாஷன் எழுதிய ’விமர்சன பாரத் கா’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஹோசபாலே, ”முகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்தனர். அவர்கள் நம்முடைய கோயில்கள், குருகுலங்கள், பண்டைய கலாசாரத்தை அழித்தார்கள். நம்மை ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால், அது ஆங்கிலேயர்களைப் போல நம்மை தாழ்வாக உணர வைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி நம்மைவிட சிறந்தவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. 'எங்ராசியத்' என்ற கருத்து இன்னும் நீடிக்கிறது. அதனால்தான் ஆங்கிலவழிப் பள்ளிகளின் வணிகம் இங்கு செழித்து வளர்கிறது.
காலனித்துவ கால மனநிலையிலிருந்து நாம் மாற வேண்டும். ஒரு புதிய அலை, நாடு முழுவதும் பரவ வேண்டும். அது மற்றவர்களைக் குறைக்கவோ அல்லது பிற நாடுகளை இழிவுபடுத்தவோ கூடாது. ஆனால், நமது சொந்த அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும். பாரதம், மற்ற நாடுகளை அழிக்காது. பாரதம் எப்போதும் உலகளாவிய நன்மைக்காக நிற்கும். ஆனால், அதற்கு முன், நாம் ஒற்றுமையாக இருந்து முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும்.
நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படித்தான் அழைக்கவேண்டும். இந்தியா என்பது ஆங்கில பெயர். நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால், இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான 'இந்தியா'வை இன்னும் ஏன் பயன்படுத்துகின்றன. இதை நாம் பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி ராஷ்டிரபதி பவனில் நடத்திய ஜி20 இரவு விருந்தில், அழைப்பிதழில் நாட்டை 'பாரதக் குடியரசு' என்று குறிப்பிட்டதை அவர் மேற்கோள் காட்டினார்.
ஹோசபாலேவின் கருத்துக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். அவர், "நமது நாட்டை பாரத், இந்தியா மற்றும் இந்துஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்திய விமானப்படை, இந்திய ராணுவம் என்றுதான் நாம் அழைக்கிறோம். மேலும் 'சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹுமாரா' பாடலையும் பாடுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை ‘I-N-D-I-A’ என்று வைத்தனர். இதனையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.