மோகன் பகவத் PTI
இந்தியா

”RSS தலைவராக சாதி தடையல்ல; பதவி விலகத் தயார்” - மோகன் பகவத் அதிரடி பேச்சு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ஆவதற்கு இந்துவாக இருப்பது மட்டுமே தகுதி என்றும், சாதி ஒரு தடையல்ல எனவும் அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Prakash J

தனக்கு 75 வயது நிறைவடைந்து விட்டதை அமைப்பிற்குத் தெரிவித்து விட்டதாகவும், எந்த நேரத்திலும் தாம் பதவி விலகத் தயார் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ஆவதற்கு இந்துவாக இருப்பது மட்டுமே தகுதி என்றும், சாதி ஒரு தடையல்ல எனவும் அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், சாதி மற்றும் அமைப்பு ரீதியான தலைமை குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். பாரம்பரியமாக சாதிக்கும் தொழிலுக்கும் இருந்த தொடர்பு தற்போது மறைந்து விட்டது என்றும், இன்று சாதி என்பது வெறும் சுயநலத்திற்காகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் சாடினார்.

மோகன் பகவத்

தனக்கு 75 வயது நிறைவடைந்து விட்டதை அமைப்பிற்குத் தெரிவித்து விட்டதாகவும், எந்த நேரத்திலும் தாம் பதவி விலகத் தயார் என்றும் அவர் கூறினார். சமூகத்தில் சாதிப் பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருப்பதாகவும், பாகுபாடுகளைக் களைய மக்கள் மனதிலிருந்து சாதியை முதலில் அகற்ற வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர், ”ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தலைமை தாங்கும் நபர் எப்போதும் சாதிகளுக்கு அப்பாற்பட்டு ஓர் இந்துவாக இருப்பார். சிறந்த நபருக்கு இந்தப் பதவி அளிக்கப்படும்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவதில்லை. அமைப்பின் பிராந்திய மற்றும் வட்டாரத் தலைவர்கள் ஒன்றுகூடி தலைவரை நியமிப்பார்கள். பொதுவாக, 75 வயதை எட்டியதும் யார் ஒருவரும் எந்தப் பதவியையும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. எனக்கு 75 வயது ஆகிவிட்டது. நான் இத்தகவலை ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், தொடர்ந்து பணியாற்றுமாறு அமைப்பு என்னிடம் கூறிவிட்டது. தலைவர் பதவியை விட்டு விலகுமாறு அமைப்பு எப்போது கேட்டுக் கொண்டாலும் பதவியை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால் சங்கப் பணியிலிருந்து ஓய்வு என்பது கிடையாது” எனத் தெரிவித்தார்.

மோகன் பகவத், மோடி

முன்னதாக,”தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்” என கடந்த ஆண்டு மோகன் பகவத் பேசியிருந்தது விவாதத்தைத் தூண்டியிருந்தது. பிரதமர் மோடியை அவர் மறைமுகமாகப் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.