biriyani FB
இந்தியா

ஹைதராபாத் | பிரியாணி உணவகத்தில் சோதனை.. ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு!

ஹைதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையில், இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

PT WEB

ஹைதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையில், இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உணவு விடுதிகள் கடந்த ஆறு ஆண்டுகளில் 70,000 கோடி ரூபாய் அளவுக்கான விற்பனையை மறைத்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. வருமானவரித் துறையின் ஹைதராபாத் பிரிவு அதிகாரிகள் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ரசீது மென்பொருள் ஒன்றில் பதிவான மற்றும் அழிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 1.77 லட்சம் உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் ரசீது மென்பொருளின் 60 டெராபைட் (Terabyte) தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஆறு ஆண்டுகளில் 2.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரசீதுகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் ரூ.2,000 கோடி, தெலங்கானாவில் ரூ.1,500 கோடி, தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி மதிப்பிலான ரசீதுகள் பதிவான பிறகு நீக்கப்பட்டுள்ளன.

AI generated image

ஹைதராபாத்தில் மட்டும் 13,317 கோடி ரூபாய் அளவிலான ரசீதுகள் பதிவான பிறகு நீக்கப்பட்டுள்ளன. ரசீதுகளில் மாற்றங்களைச் செய்ததன் மூலம் 19,400 கோடி ரூபாய் மறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள உணவு விடுதிகளில் மட்டும் 5,141 கோடி ரூபாய் அளவிலான விற்பனை இத்தகைய மோசடி மூலம் மறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள 40 உணவு விடுதிகளில் 400 கோடி மதிப்பிலான விற்பனை தரவுகள் மறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இவ்விரு மாநிலங்களில் 648 நிகழ்வுகளில் ஒரு

கோடிக்கும் அதிகமான விற்பனைத் தொகை மறைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதில் மட்டும் 416 நிகழ்வுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான விற்பனைத் தொகை மறைக்கப்பட்டுள்ள்து. 155 நிகழ்வுகளில் அறிவிக்கப்பட்டதைவிட 12 மடங்கு அதிக விற்பனை வருவாயை மறைத்துள்ளன விசாரணையில் தெரிய வந்தது.