sugar ani
இந்தியா

அதிகரிக்கும் விலைவாசி.. வரியில்லாமல் இறக்குமதி.. குறைகிறதா சர்க்கரை விலை?

பருவமழை குறைவு, விவசாய உற்பத்தி பாதிப்பு, கால்நடைத் தீவன விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

இந்தியாவில் விவசாயத்தைப் பெரிதும் நம்பியுள்ள கோடிக்கணக்கான விவசாயிகள், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் மண்ணில் ஈரப்பதம் குறைந்துள்ளது. இதனால் நெல், கோதுமை, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயிர்களை விதைப்பதில் விவசாயிகள் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சராசரியைவிடக் குறைவான பருவமழை பெய்துள்ளதால், அடுத்த அறுவடையில் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

Grain Godown

இந்தியாவில் உணவுப் பணவீக்கம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சுமார் 10 சதவீதத்தை எட்டக்கூடும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தேவேந்திர பந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் உணவுப் பொருட்களின் சில்லறைப் பணவீக்கம் 7.74 சதவீதமாக உயர்ந்தது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6 சதவீத உச்சவரம்புக்கு நெருக்கமாக உள்ளது.

இதற்கிடையே, கோழி இறைச்சி உற்பத்திக்குத் தேவையான சோளம், சோயாபீன் உள்ளிட்ட தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. கோழி உற்பத்திச் செலவில் தீவனங்களின் பங்கு மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். கால்நடை தீவன விலை உயர்வால் பால் பொருட்கள் மற்றும் முட்டையின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

grocery store

சர்க்கரை உற்பத்தியும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உள்நாட்டுத் தேவையைவிடக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு மில்லியன் டன் சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பெரிய அளவில் விலை குறையும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

எல் நினோ காலநிலை மாற்றம், ரஷ்யா - உக்ரைன் போர், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சரக்குப் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு ஆகியவையும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துகின்றன.

பருவமழை குறைவு, விவசாய உற்பத்தி பாதிப்பு, கால்நடைத் தீவன விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இதனால் வரும் மாதங்களில் இந்தியாவில் உணவுப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.