புனே முகநூல்
இந்தியா

புனேவில் பரவும் GBS நோய்- இதுவரை 73 பேர் பாதிப்பு!

புனே முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிராவில் GBS நோயால் திடீரென 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

கில்லியன் பேர் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் ஆட்டோ இம்யூன் நோயால், புனேவில், இதுவரை ஒரே வாரத்தில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 47 ஆண்களும், 26 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் தற்பொழுது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், புனே முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அதிகாரிகள் இதுவரை நகரம் மற்றும் கிராமப்புற மாவட்டங்கள் முழுவதும் 7,200 வீடுகளில் ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கண்காணிப்பை மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் இது தொற்றுநோய் அல்ல என்றும் மக்கள் இந்த நோய் பாதிப்பு குறித்து பீதியடைய வேண்டாம் என்றும் மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கில்லின்-பார் சிண்ட்ரோம் என்றால் என்ன?

GBS என்றழைக்கப்படும் இந்த நோய், நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை தாக்குவதால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஜிபிஎஸ் அரிதானது மட்டுமல்ல, அதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை.

உணவு, தண்ணீரை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும், பேசுவதிலும் சிரமம் உருவாகும், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், உயர் ரத்த அழுத்தம், கை, கால்கள் பலவீனம் அடைவது, போன்றவையும், தீவிரமடைந்தால் பக்கவாதம் கூட ஏற்படலாம்.

ஆண்,பெண் குழந்தைகள் என எந்த பாகுபாடும் பார்க்காத இந்த நோய், எல்லா வயதினரையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.