நாக்பூர் கலவரம் pt web
இந்தியா

’ஔரங்கசீப் கல்லறையை அகற்றுங்கள்..’ நாக்பூரில் வெடித்த கலவரம்.. ’சாவா’ படத்தின் தாக்கம்தான் காரணமா?

நாக்பூர் கலவரம் திட்டமிடப்பட்ட சதி திட்டம் போல தெரிகிறது என சட்டப்பேரவையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார்.

அங்கேஷ்வர்

வெடித்த வன்முறை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் பதற்றம் நீடித்து வருகிறது. நேற்று (17//3/35) மதிய வேளையில் இந்துத்துவா குழுவினர் நடத்திய போராட்டத்தில் கல்மா எனப்படும் இஸ்லாமிய நம்பிக்கை பிரகடனத்தைக் கொண்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

இதனையடுத்து காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. இதில் 6 நபர்கள் மற்றும் மூன்று காவலர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள் ஔரங்கசீப் உருவபொம்மையை மட்டுமே எரித்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவும் வகுப்புவாத மோதல்கள் தொடர்ந்தன. குறிப்பாக, நாக்பூரில் உள்ள சிட்னியூஸ் பூங்காவில் இரவு 7.30 மணிக்கு வன்முறை வெடித்தது. சிட்ப்னிஸ் பூங்காவிற்கு அருகிலுள்ள பழைய ஹிஸ்லாப் கல்லூரி பகுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த கார்களும், கட்டங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை கோட்வாலி மற்றும் கணேஷ்பத் பகுதிகளுக்கும் பரவியது.

இந்த கும்பலைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். இந்த வன்முறையின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், 11 காவல்நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணர்ச்சிகளை தூண்டிவிட்ட திரைப்படம்

எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை கடுமையாக விமர்சித்துள்ளன. பாஜக தலைமையிலான அரசின் கீழ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அவை குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் விளக்கமளித்தார்.

அவர் கூறுகையில், “சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விக்கி கௌஷல் நடித்த ‘சாவா’ திரைப்படம், மராட்டிய மன்னரின் உண்மையான வரலாற்றை மக்கள் முன் கொண்டு வந்தது. இதன்பிறகு மக்களது உணர்ச்சிகள் மீண்டும் தூண்டப்பட்டுள்ளன. ஔரங்கசீப்பிற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் வெளிப்படுகிறது. மகராஷ்டிராவை அமைதியாக வைத்திருக்க அனைவரும் உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாக்பூர் கலவரம் ஒரு திட்டமிட்ட சதித்திட்டமாகத் தெரிகிறது. நாக்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போராட்டங்களை நடத்தின. அப்போது மத உள்ளடக்கம் கொண்ட பொருட்கள் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் போல் தெரிகிறது. சட்டம் ஒழுங்கை தங்களின் கைகளில் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் கலவர கும்பல் குறிப்பிட்ட வீடுகள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்துள்ளது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து நாக்பூர் நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் மூன்று துணை காவல் ஆணையர்கள் உட்பட 33 காவல்துறையினர் காயமடைந்ததாகவும், மூத்த அதிகாரிகளில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டதாகவும் கூறினார். வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே இதுதொடர்பாக பேசுகையில், “இரு துணை ஆணையர்கள் உட்பட 34 காவலர்கள் காயமடைந்துள்ளார். ஔரங்கசீப்பின் கல்லறயை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், போராட்டங்கள் அமைதியான முறையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.