உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்காக இருந்துவரும் ஐபிஎல் தொடர் 2008 முதல் விளையாடப்பட்டு வருகிறது. 17 வெற்றிகரமான சீசன்களை கடந்து 18வது சீசானாக 2025 ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது.
இதில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்கிவருகிறது. தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17 சீசன்களில் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று வலுவான அணியாக விளங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மும்பை அணி 6 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு சென்று 5 முறை கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் இந்த சாதனையை எந்த அணியும் நெருங்கவில்லை. 3 கோப்பைகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது.
சென்னை மற்றும் மும்பை அணிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் 5 ஐபிஎல் கோப்பைகள் என்ற லெகசியை மற்ற ஐபிஎல் அணிகள் முறியடிக்க பல ஆண்டுகள் ஆகலாம்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி நீடிக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் அவர், 244 இன்னிங்ஸ்களில் 8004 ரன்கள் குவித்துள்ளார். அவருக்குப் பிறகு, ஷிகர் தவான் 6769 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கோலியின் இந்த சாதனையை முறியடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையை கிறிஸ் கெய்ல் வைத்திருக்கிறார். ஏப்ரல் 23, 2013 அன்று, ஆர்சிபி அணிக்காக விளையாடிய யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சாதனை நிகழ்த்தப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச டோட்டல் அடித்த அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் பயமற்ற கிரிக்கெட் விளையாடிய அந்த அணி, ஒரு புதிய ஹிட்டிங் ஃபார்முலாவை கையில் எடுத்தது.
கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 287 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. அதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்த ஹைதராபாத் அணி, ஐபிஎல்லில் அதிகபட்ச டோட்டல் குவித்த பட்டியலில் முதலிரண்டு இடங்களையும் நிரப்பி உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற அணி என்ற சாதனை ஆர்சிபி அணியிடமே உள்ளது. 2017 ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐபிஎல்லில் அதிகபட்ச ரன்களை சேஸ்செய்த அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்தது. 2024 ஐபிஎல்லில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 262 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்து வரலாறு படைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகக் குறைந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்த அணியாக சாதனை படைத்துள்ளது. 2009 ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 116 ரன்கள் மட்டுமே அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியை 92 ரன்களுக்குள் சுருட்டி வெற்றியை ருசித்தது.
ஐபிஎல்லின் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை 2016 ஐபிஎல்லில் 973 ரன்கள் குவித்த விராட் கோலி படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் கடந்த 17 சீசன்களில், கோலியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 900 ரன்களை எட்டியதில்லை. 2023 ஐபிஎல்லில் சுப்மன் கில் 890 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை, 2009 முதல் 2021 வரை விளையாடி 357 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் வைத்திருக்கிறார். அவருக்கு பிறகு ரோகித் சர்மா 280 சிக்சகளுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 272 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் வைத்திருக்கிறார். அவர் 169 என்ற குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 205 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில், சாஹலைத் தவிர வேறு எந்த பவுலரும் 200 விக்கெட்டை நெருங்கவில்லை.
தற்போது ஐபிஎல்லில் இருக்கும் பவுலர்களில் புவனேஷ்வர் குமார் 181 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் மற்றும் ஆர். அஸ்வின் தலா 180 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
2025 ஐபிஎல்லில் யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.