ரயில் சேவை pt desk
இந்தியா

ரூ.3,273 கோடி வருவாய்.. சாதனை படைத்த தெற்கு ரயில்வே.. புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு!

நாட்டிலேயே பயணியர் கட்டணம் மூலம் வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

PT WEB

நாட்டிலேயே பயணியர் கட்டணம் மூலம் வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நாட்டிலேயே பயணியர் கட்டணம் மூலம் வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, மொத்தம் 32 கோடியே 15 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 6.58 விழுக்காடு அதிகமாகும். மேலும், பயணியர் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டியதிலும், தெற்கு ரயில்வே முதலிடம் வகிக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 3,273 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 4.71 விழுக்காடு அதிகமாகும்.

ரயில்

எனினும் வருவாயில் முதலிடத்தில் இருந்தாலும், தெற்கு ரயில்வே, தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக, தமிழக ரயில் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். புதிய ரயில் திட்டங்கள், குறிப்பாக புதிய ரயில்கள் அறிவிப்பில், தெற்கு ரயில்வேக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உரிய கவனம் அளிக்கவில்லை என்று கருதுகின்றனர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களுக்கும், குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் ரயில்வே அளிக்கும் முக்கியத்துவத்தில், கொஞ்சம்கூட தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை என ரயில் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புல்லட் ரயில் திட்டங்கள், மகாராஷ்டிரா - குஜராத் இடையே நடந்துவருவதையும், மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு வந்தபிறகான 15 மாதங்களில் மட்டும், பிஹாருக்கு பத்துக்கும் அதிகமான ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரயில்

இதற்கிடையே, சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தஞ்சை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கோவை - சென்னை வந்தே பாரத் ரயில், 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னை பெரம்பூரில் 342 கோடி ரூபாயில் புதிய ரயில் முனையம் அமைக்க, ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.