donation pt web
இந்தியா

“தனியார் நன்கொடைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கும்” - ஆய்வறிக்கை தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் பொதுக்காரியங்களுக்கான தனியார் நன்கொடைகள் அதிகரிக்கும் என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

PT WEB

இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் பொதுநலக் காரியங்களுக்கான தனியார் நன்கொடை ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தனியார் நன்கொடை தொடர்பான அறிக்கை கூறுகிறது.

லாபநோக்கற்ற நிறுவனமான தாஸ்ரா- வும், மேலாண்மை சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் பெய்ன் (Bain) அண்ட் கோ நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள இந்திய கொடையாண்மை (Philantrophy) அறிக்கை 2025இன்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் குடும்பங்கள் மூலமாக, ரூ.1.3 லட்சம் கோடி பொதுக் காரியங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

தனியார் நன்கொடையில் 40% தொழிலதிபர்களின் குடும்பங்களால் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையிலும் CSR எனப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளின் மூலமாகவும் பெரும்பகுதி தனியார் நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. டாடா, அம்பானி, அதானி, பிர்லா ஆகிய நான்கு வணிகக் குழுமங்கள், சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் 20% பங்களித்துள்ளன. குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நடத்தும் இந்தக் குழுமங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடிவரை செலவழித்துள்ளன.

இந்தக் குழுமங்களின் நன்கொடையில் 40% பாலின சமத்துவம், பன்மைத்துவம், உள்ளிட்டவை சார்ந்த திட்டங்களுக்கும், 29% சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தப் பெருநிறுவனக் குழுமங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் எண்ணிக்கையும் அவர்களின் செல்வச் செழிப்பும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அளிக்கும் நன்கொடையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.