குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் கூடுதலாக 70 கம்பேனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 15 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தவிர 4000 இடங்களில் கட்டடங்களின் மேல் தளங்களில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதையின் இருபுறங்களிலும் உள்ள சாலைகள் அனைத்தும் இன்று மதியம் மூடப்பட்டு, அங்குள்ள கட்டடங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முப்படைகளை சேர்ந்தவர்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, குடியரசு தின அணிவகுப்புக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், தங்களுடைய அலங்கார ஊர்திகளுடன் அணிவகுப்பில் பங்கேற்க, டெல்லியில் முகாமிட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.