நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு தேசியத் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜித் தீப்கே, ஜூன் 6ஆம் தேதி இந்தியா வரும்போது விமான நிலையத்தில் தன்னை கைது செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறி, அதுவே நடந்தாலும் போராட்டம் தொடர வேண்டும் என ஆதரவாளர்களை அழைக்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டி குழு சமூக ஊடகத்தில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்ததால், பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
இதற்காக ஜூன் 6ஆம் தேதி இந்தியா வரும்போது விமான நிலையத்தில் தன்னுடன் இணையுமாறு டிப்கே தனது ஆதரவாளர்களை வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமை காலையில் டெல்லிக்கு வரும்போது தயவுசெய்து விமான நிலையத்தில் தன்னுடன் இணையுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், விமானநிலையத்திலேயே தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தீப்கே கூறியிருக்கிறார். அவ்வாறு கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கிறார்.