பிறப்பு சான்றிதழ்
பிறப்பு சான்றிதழ் ட்விட்டர்
இந்தியா

“பிறப்பு சான்றிதழில் இனி குழந்தையின் தாய், தந்தை மதத்தை தெரிவிப்பதும் கட்டாயம்!”

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் தெரிவிப்பது கட்டாயம் என உள்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பிறப்பு பதிவுக்கான படிவம் 1 ல் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் படி இருவரின் மதத்தையும் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், முழுக்க முழுக்க புள்ளிவிவரங்களுக்காக மட்டுமே இத்தகவல்கள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து மாநில அரசுகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை முறையாக ஏற்றுகொண்டு அது குறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை

‘இதன் மூலம் ஒருவரின் பிறப்பு, இறப்பு தரவுகள் தேசிய அளவில் பராமரிக்கப்படும். இந்த தேசிய தரவு தளத்தினை பராமரிக்கும் அதிகாரம் பதிவாளர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களின் சேர்க்கை, ஓட்டுநர் உரிமை, அரசு பணிகளுக்கான நியமனம், திருமணங்கள் பதிவு போன்ற ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் (Birth certificate) முதன்மை ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறப்பு பதிவேட்டில் பெற்றோர்களின் ஆதார் என், மொபைல் எண், மின்னஞ்சல், மாநிலம், மாவட்டம், வசிப்பிடம் நகரமா அல்லது கிராமமா, வார்டு எண் என்ன போன்ற முழு தகவல்களும் சேர்க்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இது நடைமுறைக்கு வருமென கூறப்பட்டுள்ளது. மாநில அரசு இதை ஏற்றபின் அறிவிப்பு வெளியிட உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத் தளத்தை பராமரிக்க பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.