கர்நாடகாவில் சிக்கமகளூரு என்ற மாவட்டத்தில், தந்தையொருவர் தன் மகளின் திருமணத்திற்கு முந்தைய நாள் மரணித்துள்ளார். இதை மகளிடம் தெரிவிக்காத உறவினர்கள், அந்த மகளுக்கு தாங்களே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கர்நாடகாவின் சிக்கமகளூருவை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவிற்கு ஜனவரி 20 (நேற்று) அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தன் மகளுக்காக பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார் சந்துரு. இதில் கடந்த ஜனவரி 19 அன்று, தன் மகளின் திருமண சான்றிதழ் ஏற்பாடுகளை செய்ய ஹுலிதிமபுரா என்ற பகுதிக்கு சென்றுள்ளார் சந்துரு.
அதற்குப்பின் இருசக்கர வாகனத்தில் திரும்பி உள்ளார். வரும் வழியில், சாலை விபத்தில் சிக்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இருப்பினும் உறவினர்கள் தீக்ஷிதாவிடம், சந்துரு சிகிச்சையில் இருப்பதாக கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருந்தபோது சந்துரு, தன் மகளிடமும் மனைவியிடமும் தான் திருமண வேலையாக இருப்பதாகவும், இடையே மருத்துவமனை செல்ல வேண்டியிருப்பதாகவும் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீக்ஷிதாவின் திருமணத்துக்குப் பின்னர், தந்தை சந்துருவின் மரணம் குறித்து தீக்ஷிதா மற்றும் அவரது தாய்க்கு தெரிவிக்கபட்டுள்ளது. இதையறிந்து அதிர்ந்த அவர்களுக்கு கிடைத்ததென்னவோ சந்துருவின் உடல் மட்டுமே. இதையடுத்து திருமண வீடு, சோகத்தில் மூழ்கியுள்ளது.