பீகார் | சபாநாயகர்கள் மாநாடு.. பாதியிலேயே வெளியேறிய அப்பாவு! நடந்தது என்ன?
இந்திய அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அகில இந்திய மாநில சட்டசபை சபாநாயகர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகர்களின் 85வது மாநாடு பீகார் மாநிலம் பாட்னா நகரில் இன்று தொடங்கியது. இதில் அனைத்து மாநில சட்டசபை மற்றும் யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவும் கலந்துகொண்டார்.
மாநாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு வலுவாக்குவது என்பது குறித்து விவாதம் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய அப்பாவு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விமர்சித்துள்ளார்.
அப்போது அவர், “அரசமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்; அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் ஆளுநர் தலையிடுகிறார். அரசமைப்பு விதிகளை தமிழக ஆளுநர் கேலிக்கூத்தாக்கி வருகிறார். தமிழக ஆளுநரின் தலையீடு கவலை அளிப்பதாக உள்ளது" என விமர்சித்தார்.
இதையடுத்து, அவரது பேச்சில் குறிக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், தொடர்ந்து அவரைப் பேச அனுமதி மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அப்பாவு மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். அப்பாவுவின் கருத்துகள் அனைத்தும் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.