டெல்லியில் காற்று மாசு நேற்று மாலை, தீவிரமான அளவை நெருங்கியது. நேற்று மாலை நிலவரப்படி, 15 இடங்களில் காற்றின் தரக்குறியீடு, 400ஐ கடந்தது. சராசரியாக, 372 ஆக பதிவானது. டெல்லியில் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு, மிகவும் மோசமான நிலையில் இருக்குமென, டெல்லிக்கான காற்று தர முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.. இதனை அடுத்து டெல்லிக்கு தொடர்ந்து ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த காற்று மாசுபாட்டிற்கு என்ன காரணம்? டெல்லியின் காற்றின் தரம் எவ்வளவு மோசமாக உள்ளது? மக்களின் நிலை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் ..
தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், டெல்லியில் குளிர் காலத்தில் காற்று மாசுவின் அளவு உச்சத்தை தொடும். ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த காற்று மாசு பிரச்னைக்கும் டெல்லி அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் காற்று மாசைக் குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது. ஆனால் அதுவும் தோல்வியடைந்தது.
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து 'கடுமையான' அளவில் இருந்து வருகிறது.. நகரின் பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு(AQI) இன்று 400 ஐத் தாண்டியது. காற்றின் நச்சுப் புகைமூட்டத்தால் தலைநகருக்கு 'சிவப்பு எச்சரிக்கை' கொடுக்கப்பட்டுள்ளது.. மேலும் டெல்லி நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, காலை 6 மணிக்கு அளவிடப்பட்ட டெல்லியின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக்குறியீடு( AQI ) 392 ஆக பதிவாகி, நாடு தழுவிய அளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மாறியது.
நகரின் 38 கண்காணிப்பு நிலையங்களில், பல பகுதிகளில் மாசு அளவு குறிப்பாக அதிகமாக இருந்தது. ஆனந்த் விஹாரில் 412, புராரி கிராசிங்கில் 430, ஐடிஓவில் 420, முண்ட்காவில் 420, நஜாஃப்கரில் 347, ஓக்லாவில் 405, பஞ்சாபி பாக்ஸில் 415, ஆர்கே புரத்தில் 421, வஜீர்பூரில் 436 மற்றும் நரேலாவில் 419 என காற்றின் தரக் குறியீடு (AQI) பதிவாகியுள்ளது.
மேலும் நொய்டாவின் காற்றின் தரக் குறியீடு 392 ஆகவும், 'கடுமையான' வகையை நெருங்கவும் இருந்தது, அதே நேரத்தில் கிரேட்டர் நொய்டா 365 ஆகவும் இருந்தது. காஜியாபாத் நகரமும் 387 வுடன் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் தலைநகரம் முழுவதும் நச்சுப் புகைமூட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளதால், டெல்லியின் முதல்வர் ரேகா குப்தா தனியார் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார், அதே நேரத்தில் டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி அலுவலகங்களின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இதில் டெல்லி அரசு அலுவலகங்கள் முன்பு காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படும். இப்போது அதற்கு பதிலாக காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும். மறுபுறம், டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும், அதற்கு பதிலாக இப்போது காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் தலைநகரில் கழிவுகளை எரிப்பதேயாகும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் காற்று தர முன்னறிவிப்புக்கான முடிவு ஆதரவு அமைப்பு (DSS) படி, டெல்லியின் மாசுபாட்டில் 30 சதவீதம் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது, அதே நேரத்தில் 15 சதவீதம் போக்குவரத்துத் துறையிலிருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.