ஒரே பாகமாக வரும் KILL BILL... படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா? | Quentin Tarantino
குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் உமா துர்மன் நடிப்பில் உருவாகி 2003ல் வெளியான படம் Kill Bill: Volume 1. இதன் இரண்டாம் பாகம் Kill Bill: Volume 2 2004ல் வெளியானது. இந்த இரு பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டு வர இருக்கிறார் டேரண்டினோ, அதுவும் ஒரே பாகமாக.
இரு பாகங்களும் இணைக்கப்பட்டு `Kill Bill: The Whole Bloody Affair' என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. ஒரு பெண்ணின் பழிவாங்கும் படலத்தை மையமாகக் கொண்டு உருவானதே Kill Bill படத்தின் இரு பாகங்களும் இதில் உள்ள பல சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானவை. ஆனால் அதிலும் சில காட்சிகள் நேரம் கருதி ட்ரிம் செய்யப்பட்டது. தற்போது வரப் போகும் படத்தில் இதற்கு முன் பார்க்காத ஏழு நிமிட அனிமேஷன் சண்டைக்காட்சி முழுவதாக இடம்பெற்று உள்ளது. மேலும் இப்படத்தில் மிகப்பிரபலமான The Bride vs the Crazy 88 சண்டைக்காட்சி, துவங்கும் போது கலராகவும், வன்முறை அதிகமான பின் கருப்பு வெள்ளையிலும் இருக்கும். ஆனால் இந்த முறை அந்த முழு சண்டைகாட்சியும் கலரிலேயே வர இருக்கிறது.
இப்படத்தை குவென்டின் டரான்டினோவின் எடுத்த போதே ஒரே பாகமாக வெளியிடவே திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது, மக்கள் இவ்வளவு நீளமான படத்தை பொறுமையாக பார்க்க மாட்டார்கள் என நிர்வாக தயாரிப்பாளர் Harvey Weinstein தந்த அழுத்தத்தினால், இரு பாகங்களாக மாற்றப்பட்டது. தற்போது Extended Cut ஆக உருவாகியுள்ள இந்த `Kill Bill: The Whole Bloody Affair' 281 நிமிடங்கள் அதாவது, 4 மணிநேரம் 41 நிமிடங்கள் ஓடும் படமாக தயாராகியுள்ளதாம். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் பாகுபலியின் இரு பாகங்களும் ஒரேபாகமாக பாகுபலி தி எபிக் என வெளியானது குறிப்பிடத்தக்கது.

