18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான குழுவினர், சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம் அளித்தனர். மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது.
இந்த நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தது தொடர்பான குறித்த நிலை அறிக்கையை வெளியிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த அறிக்கையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து, நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”போலீஸாரைக் கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை RCB அழைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ”தற்போதைய இந்த வழக்கில், பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களில் எந்த விண்ணப்பங்களும் நிறுவன அமைப்பாளரால் உரிமம் வழங்கும் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி உள்ளது எனவும் ஆகையால் அதில் பங்கேற் வருமாறும் நிறுவனத்தின் சார்பில் சமூக வலைத்தளம் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுகளே லட்சக்கணக்கான ரசிகர்களை அங்கு இழுத்து வந்தது. சாலைகளில் இந்த எதிர்பாராத மக்கள் கூட்டமானது, மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேவைப்படும் நபர்களைத் தவிர, பாதைகளில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினரை அவசரமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களால் சரியான திட்டமிடல் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தேவையான தகவல்களை வழங்கத் தவறியதாலும் இந்த நிலைமை ஏற்பட்டது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.