2 மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் தேவைக்கு ஏற்ப பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் இந்த முறையும் இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் முந்தைய அளவான 5.25 சதவீதத்தில் இருந்து 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2023-ம் ஆண்டுக்குப் பின்னர், அதாவது சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களில் 96 ரூபாய்க்கும் கீழே சரிந்தது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு குறைந்து நாட்டில் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ரூபாயின் மதிப்பை தக்க வைக்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால் இந்தியாவில் உள்ள பிற வங்கிகளும் தங்களின் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்பதால் இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தாங்கள் வாங்கிய வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற அனைத்துக் கடன்களுக்கான வட்டியும் உயரும் என்பதால் வரும் காலங்களில் பொதுமக்களின் செலவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் ரெப்போ விகிதம் உயரும் போது, வங்கிகள் வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதத்தையும் உயரும். இதனால் வங்கியில் வைப்புத் தொகையை வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வட்டி தொகை கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதற்கு முக்கிய காரணம் பணபுழக்கத்தை கட்டுப்படுத்துவதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்களை உயர்த்துவன் மூலம் மக்கள் வங்கிகளில் தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்த்து, பணத்தை சேமிக்க தொடங்குவார்கள். இதனால் பொருட்களுக்கான தேவை குறைந்து அதன் விலைகளும் குறைந்து, பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிட த்தக்கது.