6 மாதங்களாக பொருட்கள் வாங்கவில்லை எனில் உங்களின் ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் 20.4 கோடி ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கக் கூடிய இலவச உணவு தானியங்கள் அந்தந்த மாநிலங்களின் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களையும் உள்ளடக்கி வழங்கப்படும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம் நாடு முழுக்க சுமார் 80.6 கோடி பேருக்கும் அதிகமானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு இலவச உணவு தானியங்கள் சென்று சேருவதை உறுதி செய்வதற்காக பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் நாளை தொடங்குகின்றன.
அதன்படி, பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைகள், ஒரு குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த பின்னும் அவர்களின் ரேஷன் கார்டு முன்பிருந்த பகுதியிலேயே இருப்பது, ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளில் இருப்பது, குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்த பின்னும் அவரது பெயர் ரேஷன் அட்டையில் நீடிப்பது என்பன போன்ற காரணங்களால் இலவச உணவு தானியங்கள் தகுதியானவர்களுக்கு சென்று சேருவதில் சிக்கல் நீடித்து வருவதாக தெரிவிக்கிறது மத்திய அரசு.
இவற்றை சரிசெய்ய அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தரவு தளத்தில் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது ஒருபுறம் இருந்தாலும் தற்போது மிகப்பெரும் நடவடிக்கையாக, 6 மாதங்களுக்கு பொருட்கள் வாங்காமல் இருக்கக் கூடிய ரேஷன் அட்டைகளை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவுள்ளது. அதன்படி அவை நாளை முதல் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை ரேஷன் அட்டை முடக்கப்பட்ட பின் அதனை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டுவர வேண்டுமெனில், அதற்கும் 3 மாத காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. தகுதியை உறுதி செய்வதற்கான அடிப்படை விதியாக e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும். ஏனெனில் ரேஷன் அட்டைகள் தற்காலிகமாகவே முடக்கப்படுகின்றன, மேலும் தரவுதளத்தில் இருந்து முடக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் விவரம் உடனடியாக நீக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் e-KYC நடைமுறையை முடிப்பவர்களின் தகுதி உறுதிசெய்யப்படும் எனவும், ஒருவேளை சில இடங்களில் தேவைப்பட்டால் கள ஆய்வு நடத்தி தகுதியை உறுதி செய்வோம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த 2024-ல் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையில் 1.58 கோடிக்கும் அதிகமான அட்டைகள் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தகுதி நிரூபிக்கப்பட்ட அட்டைகள் மீண்டும் பயன்பாட்டு வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.