எலிவளை சுரங்க முறை
எலிவளை சுரங்க முறை புதிய தலைமுறை
இந்தியா

அது என்னப்பா ‘எலிவளை சுரங்க முறை..?’ வெற்றிகரமாக தொழிலாளர்களை மீட்ட முறை பற்றிய முழுமையான தகவல்!

PT WEB

சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியத் தொழிலாளர்களை மீட்பதற்கான பணியில் பிரம்மாண்டமான ஆகர் இயந்திரம் உட்பட மிகப்பெரிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆகர் இயந்திரத்தால் துளையிடும் முயற்சி தோல்வியடைந்து பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், மீட்புக்குழுவினரின் தேர்வு  RAT HOLE MINING  METHOD  எனப்படும் எலிவளை சுரங்க முறையாக இருந்தது.

RAT HOLE MINING METHOD

இதற்காக எலிவளை சுரங்கமுறையில் தேர்ச்சி பெற்றவர்கள் சில்க்யாராவுக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த முறையில் சுரங்கத்திற்குள் தோண்டிய தொழிலாளர்களால்தான் 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதென்ன எலிவளை முறை என்று பார்க்கலாம்.

எலிவளை முறை:

எலி வளை தோண்டுவதை கவனித்திருக்கிறீர்களா? அதே முறைதான். இருக்கும் இடத்திற்கு ஏற்ப, வளைந்தும், நெளிந்தும் பெரிதும், சிறிதுமாக வளை தோண்டுவது போல, ஒரு ஆள் நுழையும் அளவுக்குத் தோண்டுவார்கள். இந்த வகை சுரங்கம் தோண்டும் முறை, மேகாலயா போன்ற மாநிலங்களில் நிலக்கரியை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் குறுகலான அல்லது செங்குத்தான பகுதிகளுக்குள் நுழைந்து  நிலக்கரியை கண்டுபிடிப்பார்கள். ஒரே ஒருநபர் மட்டும் உள்ளே நுழைந்து எலிவளை போல தோண்டி நிலக்கரியை எடுத்துவருவர். நிலக்கரிக்கான குழி தோண்டப்பட்ட பின், சுரங்கத் தொழிலாளர்கள் கயிறுகள் அல்லது ஏணிகளை பயன்படுத்துவர். இந்த வகையில் சுரங்கம் தோண்ட இவர்கள் பயன்படுத்துவதெல்லாம், கைக்கோடாரிகள், மண்வெட்டிகள்,
கூடைகளே.

எலிவளை சுரங்க முறை இரண்டு விதங்களில் நடத்தப்படுகிறது. ஒன்று SIDE CUTTING மற்றொன்று BOX CUTTING.  சைடு கட்டிங்கை பொறுத்தவரை, மலைச்சரிவுகளில் பக்கவாட்டில் தோண்டியபடி  நிலக்கரி தென்படும்வரை செல்வார்கள். மேகலாயாவில் மலைப்பகுதிகளில் நிலக்கரியை எடுக்கும்போது மலைச்சரிவில் 2 மீட்டர் மெல்லிய அளவுக்கு நிலக்கரி படிந்திருக்கும். அதற்காக இந்தமுறையை பின்பற்றுவார்கள்.

மற்றொன்று, பாக்ஸ் கட்டிங் முறை. இந்த வகையில் 10 முதல் 100 சதுரமீட்டர் வரை செவ்வக வடிவில் தோண்டிச்செல்வர். செங்குத்தாக தோண்டியபடி 100 முதல் 400 மீட்டர் ஆழம் வரைசெல்வர்.  இதுபோன்ற எலிவளை சுரங்கம் தோண்டும் முறையில் ஆபத்துகளும் அதிகம் இருக்கின்றன.

இது முறைப்படுத்தப்படாத பாதுகாப்பற்ற முறையும் கூட. காற்று வந்து செல்வதற்கான வசதிகளோ, முறையான கட்டமைப்பு வசதிகளோ, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த வகை தோண்டுதலால் மண் தளர்தல், வனம் அழிப்பு, நீர்மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் விரோத நிகழ்வுகளும்
நடக்கின்றன. மோசமான பணிச்சூழலாலும், சுற்றுச்சூழல்
பாதிப்பாலும், எலிவளை சுரங்க முறைக்கு கடுமையான விமர்சனங்களும் இருக்கின்றன.

மேகாலயா தொடர்பான வழக்கொன்றில், 2014 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம், எலிவளை சுரங்க முறைக்கு தடை விதித்தது. இந்த தடை 2015 ஆம் ஆண்டும் நீட்டிக்கப்பட்டது. மழைக்காலங்களில் எலிவளை சுரங்கத்திற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து அதன் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகளுக்கு காரணமாவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேகாலயா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.