model image
model image freepik
இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தேர்வெழுத அனுமதி மறுப்பு... தனியார் பள்ளியின் அதிர்ச்சி செயல்!

Prakash J

நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் பள்ளிகளின் இறுதியாண்டுத் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானிலும் அப்படி தேர்வுகள் பரபரப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருவரை, பள்ளி நிர்வாகம் ஆண்டுப் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

model image

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய மாமா மற்றும் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். இதிலிருந்து மீண்டு பள்ளிக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், மாணவி வன்கொடுமைக்கு உள்ளானவர் என்பதை அறிந்த சக மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் தவறான நோக்கத்துடன் முறையிட்டுள்ளனர். அதன்பேரில் பள்ளி நிர்வாகமும், ‘இதுபோன்ற நிலையில் நீ பள்ளிக்கு வந்தால், பள்ளியின் சூழல் கெட்டுவிடும். ஆகையால் வீட்டிலிருந்தே படி’ என ஆசிரியர்கள் மூலம் அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாணவியும் வீட்டிலிருந்தே படித்து வந்துள்ளார்.

இதையும் படிக்க: டெல்லி | பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை; CBI விசாரணையில் கடத்தல் கும்பல் அதிர்ச்சி தகவல்

இந்தச் சூழலில் பொதுத் தேர்வு சம்பந்தமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளியை அணுகியிருக்கிறார். அப்போது ஆசிரியர்கள், ’இத்தனை நாள்கள் நீ பள்ளிக்கு வராததால் உன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதனால் உனக்கு பொதுத் தேர்வு எழுத அட்மிட் கார்டு வழங்க முடியாது’ எனக் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, இது சம்பந்தமாக வேறொரு பள்ளி ஆசிரியரை அணுகியுள்ளார். அவர், சைல்டு ஹெல்ப்லைன் நம்பரை (child helpline number) தொடர்புகொள்ளுமாறு மாணவியை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சைல்டு ஹெல்ப்லைன் நம்பரைத் தொடர்புகொண்ட மாணவி, பள்ளியில் தனக்கு நேர்ந்ததைக் குறிப்பிட்டு குழந்தைகள் நல ஆணையத்துக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரிலேயே இவ்விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

model image

இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் பேசியிருக்கும் குழந்தைகள் நல ஆணையத் தலைவர் அஞ்சலி சர்மா, “அந்த மாணவியிடம் இதுதொடர்பாக நான் பேசியபோது, மனச்சோர்வு அடைந்திருப்பதாக தெரிவித்தார். அவர் 10-ஆம் வகுப்புத் தேர்வில் 79 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் அவர் நன்றாகப் படிக்கக்கூடியவர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தால், அதிலும் அவர் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பார்.

ஆனால், பள்ளியின் அலட்சியத்தால் தற்போது ஒரு வருடத்தை அவர் இழக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. எங்களுக்கு வந்த கடிதத்தின் நகல் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, குழந்தைகள் நல ஆணையமும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவிக்குத் தேவையான சட்டப்பூர்வ உதவி வழங்கப்படுவதை உறுதி செய்யவிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

1098 - child helpline number

மேலும் தற்போது தேர்வு முடிந்துவிட்டாலும் மாணவியைத் துணைத் தேர்வில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஏப். 7 முதல் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த சோனம் வாங்சுக்.. 144 தடை பிறப்பித்த அரசு!