model image
model image freepik
இந்தியா

ராஜஸ்தான் பாலியல் வழக்கு: விசாரணையில் பெண்ணிடம் ஆடையைக் கழற்றச் சொன்ன நீதிபதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

Prakash J

ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளில் பெண்கள் வளர்ந்து வந்தாலும், அவர்களுக்கு எதிராக நாளுக்குநாள் வன்முறைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அதிலும், தவறிழைப்பவர்களுக்குத் தண்டனை தரக்கூடிய இடத்தில் இருக்கும் ஒருசில நீதிமான்களே, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு செயல்களில் ஈடுபடுவது சமீபகால பேச்சாக இருக்கிறது. அந்த வகையில், விசாரணைக்குச் சென்ற பெண்ணிடம், மாஜிஸ்திரேட் ஒருவர், அவரின் ஆடைகளை கழற்றச் சொல்லி, உடலிலுள்ள காயங்களை காட்டுமாறு சொன்ன செய்திதான் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

model image

ராஜஸ்தான் மாநிலம், கரௌலி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், கடந்த மாதம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண், ஹிண்டோன் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 27ஆம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் கடந்த 30ஆம் தேதி, அந்தப் பெண், மாஜிஸ்திரேட் (ஆண்) முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அப்போது, அந்த நீதிபதி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணிடம் ஆடைகளை அகற்றி காயங்களைக் காண்பிக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், காயங்களைக் காட்ட மறுத்துள்ளார். மேலும், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விசாரணையின்போது பெண்ணிடம் காயத்தைக் காட்டச் சொன்னதாகக் கூறப்படும் மாஜிஸ்திரேட் மீது இன்று (ஏப்ரல் 4) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ”அவர் காயங்களை பார்ப்பதற்காக, தனது ஆடைகளை கழற்றச் சொன்னார். இது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பெண் நீதிபதிகள் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் திரிபுராவில் உள்ள கமல்பூர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியின் அறைக்குச் சென்று தனியாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த சமயத்தில், அந்த நீதிபதியே, அப்பெண்ணை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதுபோல் கடந்த ஆண்டு இறுதியில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

model image

அதில், ”நான் நீதிபதியாக இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் ஒருவரால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளேன். அவருடன் பணியாற்றும் சகாக்களாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளேன். இதுதொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் புகாரளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. என்ன ஆனது என்று யாரும் கேட்கவில்லை. ஏன் கவலையாக இருக்கிறேன் என்று கண்டுகொள்ளவில்லை. நான் ஒரு குப்பையை போல நடத்தப்பட்டுள்ளேன். எனது உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கு அனுமதி கொடுங்கள். எனது வாழ்க்கை முடியட்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உடலிலுள்ள காயங்களை காட்டுமாறு பெண்ணிடம் ஆண் நீதிபதி சொன்ன விஷயமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!