ஞானதேவ் அஹுஜா எக்ஸ் தளம்
இந்தியா

ராஜஸ்தான் | பட்டியலின காங். எம்எல்ஏ கோயிலில் நுழைந்ததால் சுத்தம் செய்த பாஜக தலைவர் இடைநீக்கம்!

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கோயிலுக்குள் நுழைந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கோயில் ஒன்றில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ராமநவமி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஆல்வார் தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏவுமான டிகா ராம் ஜூல்லியும் கலந்துகொண்டார். இவர் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஞானதேவ் அஹுஜா, “அவர் கோயிலுக்குள் நுழைந்து கைகளால் சாமியைத் தொட்டால் கோயில் புனிததன்மையற்றதாகி விடும்” எனத் தெரிவித்ததுடன், மறுநாள், டிகா ராம் வந்து சென்றபின்பு அஹுஜா தண்ணீர் தெளித்து கோயிலில் பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ”எம்.எல்.ஏவின் சாதிப் பின்னணியைச் சுட்டிக்காட்டி, அஹுஜாவின் செயல்கள் அவரது சாதிய மனநிலையைப் பிரதிபலிக்கின்றன”எனக் கருத்து தெரிவித்தது.

”ராஜஸ்தான் முதல்வரும் மாநில பாஜக தலைவரும் ஒரு மூத்த தலைவரின் இத்தகைய நடத்தையை அங்கீகரிக்கிறார்களா? இந்த இழிவான செயலுக்காக பாஜக அதன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமா” என முன்னாள் முதலவர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஞானதேவ் அஹுஜா

காங்கிரஸ் மூத்த எம்பி ஜெய்ராம் ரமேஷ்,"இந்த அவமானகரமான சம்பவத்திற்கு பாஜக தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு மாநிலத் தலைமை அஹுஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது. தவிர, கட்சியிலிருந்து இடைநீக்கமும் செய்துள்ளது.

2013 முதல் 2018 வரை ராம்கர் எம்எல்ஏவாக இருந்த ஞானதேவ் அஹுஜா சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல. 2016ஆம் ஆண்டு ஜே.என்.யுவில் எழுப்பப்பட்ட தேச விரோத கோஷங்கள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின்போது அவர் முதன்முதலில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஜே.என்.யு வளாகத்தில் ஒவ்வொரு நாளும் 3,000 ஆணுறைகள் மற்றும் 2,000 மதுப் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்படுவதாக அஹுஜா கூறியிருந்தார். அதுபோல், 2017ஆம் ஆண்டு பசு பாதுகாவலர்களால் பால் விவசாயி பெஹ்லு கான் கொல்லப்பட்டதையும் அவர் ஆதரித்திருந்தார்.