ராஜ் தாக்கரே எக்ஸ் தளம்
இந்தியா

இந்தி திணிப்பு | ”உங்களை உதைப்பேன்” - உ.பி., பீகார் குடியேறிகளை எச்சரித்த ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரும் உத்தவ் தாக்கரேவின் சகோதரருமான ராஜ் தாக்கரே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக இந்தி திணிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறுவதையொட்டி அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து பாஜக - சிவசேனா ஒரு கூட்டணியிலும் பிரிந்துகிடந்த சரத் பவார் - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸும், அதுபோல தாக்கரே சகோதரர்கள் ஓர் அணியிலும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரும் உத்தவ் தாக்கரேவின் சகோதரருமான ராஜ் தாக்கரே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக இந்தி திணிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜ் தாக்கரே

அவர், “உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த மக்கள் இந்தி உங்கள் மொழி அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான், அந்த மொழியை வெறுக்கவில்லை. ஆனால், நீங்கள் அதைத் திணிக்க முயன்றால், நான் உங்களை உதைப்பேன். அவர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மகாராஷ்டிராவிற்கு வந்து உங்கள் பங்கைப் (மராத்தி) பறிக்கிறார்கள். நிலமும் மொழியும் போய்விட்டால், நீங்கள் (மராட்டியர்கள்) முடிந்துவிடுவீர்கள். இது மராத்தி மனிதனுக்குக் கடைசித் தேர்தல். இன்று இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிராவுக்காக ஒன்றுபடுங்கள். எந்த மொழியின் மீதும் கோபம் இல்லை. ஆனால், அதன் திணிப்புக்கு எதிராகப் போராடுவோம்” என அவர் எச்சரித்துள்ளார்.