ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது இந்திய ரயில்வேயின் மரபாக இருந்து வருகிறது. அந்தவகையில் தான், இந்தாண்டு வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்தச்சூழலில் தான், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வேயில் பணியாற்றும் 11.40 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதற்காக, 2,009.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பின் மூலம், தண்டவாளப் பராமரிப்பாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், உதவியாளர்கள், ரயில்வே அமைச்சக ஊழியர்கள் மற்றும் இதர சி பிரிவு உள்ளிட்ட ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் ஒவ்வொரு ஊழியருக்கும் அதிகபட்சமாக 17,951 ரூபாய் போனஸாக வழங்கப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து, மேலும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அப்போது 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ஊழியர்கள் பயன்பெற்ற நிலையில், 1,865 புள்ளி 68 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது 2026ஆம் ஆண்டுக்கான அறிவிப்பில் பயனாளிகளின் எண்ணிக்கையும், மொத்த நிதி ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.