ரயிலில் பயணம் செய்வதற்குப் பலரும் தட்கல் முறையில் டிக்கெட் பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகள் நடப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் உருவாக்கப்பட்ட இரண்டரை கோடி போலி ஐடிகள் முடக்கப்பட்டது. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்து, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவதற்காக, இந்த போலி ஐடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.யில், சந்தேகத்திற்கிடமான 2.9 லட்சம் பி.என். ஆர்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மோசடிகளைத் தடுக்க, ஐ.ஆர்.சி.டி.சி புதிய தொழில்நுட்பங்களையும், Bot தடுப்பு மென்பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி தளத்தில் இ-ஆதார் வெரிபிகேஷன் மூலம் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் உறுதி செய்யப்பட்ட கணக்குகள் மூலமே தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறையால், இனி யாரும் முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.