rahul gandhi PTI
இந்தியா

அடேங்கப்பா..! ’ஒரே புகைப்படத்துடன் 1,24,177 வாக்காளர்கள்’ - ஹரியானா குறித்து ராகுல் பகீர் புகார்கள்!

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Prakash J

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாக்குத் திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அடுத்து, செப்டம்பர் மாதம், கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டதாக அவர் ஆதாரத்துடன் கூறினார். இப்படி, தொடர்ந்து அவர் வாக்குத் திருட்டு தொடர்பாக குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், அதைத் தேர்தல் ஆணையம் மறுத்துவருகிறது. இந்த நிலையில், 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

”காங். வெற்றியை தடுக்க ஓட்டு திருட்டு..”

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்துத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதையே சுட்டிக்காட்டின. ஹரியானாவின் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளுடன் பொருந்தவில்லை. இது இதற்கு முன்பு நடந்ததில்லை. காங்கிரஸின் மகத்தான வெற்றியை தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுபற்றி ஆய்வு செய்தபோது என்னால் நம்ப முடியவில்லை. இதனால் டீமை பலமுறை பரிசோதிக்க உத்தரவிட்டேன். காங்கிரஸின் மகத்தான வெற்றியை ஓட்டு திருட்டு மூலம் தடுத்துவிட்டனர். உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

”ஹரியானாவில் 25 லட்சம் பேர் போலியானவர்கள்”

தொடர்ந்து அவர், “ஒரு பாஜக தலைவரின் முகவரியில் 66 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னொருவரின் வீட்டில் 500 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பாஜக தலைவரான தல்சந்த், உ.பி. மற்றும் ஹரியானா இரண்டிலும் வாக்களித்து வருகிறார். மதுராவில் உள்ள பாஜக சர்பஞ்ச் பிரஹலாத்தும் அதையே செய்கிறார். ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 25 லட்சம் பேர் போலியானவர்கள். இதில், தனது குழு 5.21 லட்சம் போலி வாக்காளர் பதிவுகளை கண்டுபிடித்துள்ளது. ஹரியானாவில் உள்ள ஒவ்வொரு எட்டு வாக்காளர்களில் ஒருவர் போலியானவர்.

ஹரியானாவில் ஒரே புகைப்படத்துடன் 1,24,177 வாக்காளர்கள் உள்ளனர். சீமா, ஸ்வீட்டி மற்றும் சரஸ்வதி, ரஷ்மி, வில்மா போன்ற வெவ்வேறு பெயர்களில் 22 முறை வாக்களித்ததாகக் கூறப்படும் பிரேசிலிய மாடலிங் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளது. நான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. பீகாரிலும், அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

rahul gandhi

”தோல்விகளை மறைக்க பேசுகிறார் ராகுல்” - கிரெண் ரிஜுஜு

ராகுலின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் மறுத்துள்ளன. அதேபோல் இவ்விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, “நாங்கள் ஒருபோதும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை கேள்வி கேட்கவில்லை, ஆனால் அவர்களால் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைக்க பத்திரிகையாளர்களை சந்தித்தார். பீகாரில் (நாளை) தேர்தல் நடைபெறும், இருப்பினும், அவர் ஹரியானா பற்றிய கதைகளைப் பகிர்ந்துகொண்டார். பீகாரில் காங்கிரஸுக்கு எதுவும் மிச்சமில்லை என்பதை இது காட்டுகிறது. அதனால்தான் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அவர் ஹரியானா பிரச்னையை எழுப்புகிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக, அவர் தீவிரமான பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும், பொருத்தமற்ற பிரச்னைகளில் நேரத்தை வீணாக்கக்கூடாது என்று நான் அவருக்கு அறிவுறுத்துவேன். வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியாவின் நிறுவனங்களையும் நீதித்துறையையும் துஷ்பிரயோகம் செய்கிறார். இந்தியாவிற்கு வெளியே யாரோ அவருக்கு இதுபோன்ற நியாயமற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.