கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளைப் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மகா பஞ்சாயத்து' விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) கொச்சிக்கு செல்ல உள்ளார். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விழா, கொச்சியின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் மைதானத்தில் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சுமார், 15,000 காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவின், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் காலை 11 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரத் தொடங்குவார்கள் எனவும் ராகுல் காந்தி மதியம் 2 மணியளவில் உரையாற்றுவார் எனவும் கேரள பிரதேச காங்கிரச் கமிட்டி சார்பில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை கொண்டாடுவது மட்டுமல்லாமல், விரைவில் வரவிருக்கும் 2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாகவும் அமையும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகா பஞ்சாயத்து விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று கொச்சி செல்லும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இப்பயணத்தின் ஒரு பகுதியாக, திருக்காக்கராயில் உள்ள பிரபல இலக்கியத் திறனாய்வாளர் எம். லீலாவதி அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு 'பிரியதர்ஷினி இலக்கிய விருது' வழங்கி கௌரவிக்க உள்ளார். ராகுல் காந்தியின் இந்த வருகையை முன்னிட்டு கொச்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.