ராஜஸ்தானில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உணர்ச்சி பொங்க பல விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில், ” கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? “ என்று பிரதமர் மோடியை நோக்கி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "பழிவாங்குவதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்படவில்லை. தர்மத்தை காப்பதற்காகவே அது தொடங்கப்பட்டது. இது தான் பயங்கரவாதத்தை அழிக்கும் வழி. இது தான் இந்தியா; புதிய இந்தியா.
தாய்மார்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அழித்தவர்கள், தற்போது மண்ணோடு மண்ணாக பஸ்பமாகியுள்ளனர். இந்திய மக்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. பாரத மாதாவின் சேவகனான இந்த மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை.. சிந்தூர் தான் ஓடுகிறது. என் நரம்புகளில் கொதிக்கும் குங்குமம் பாய்கிறது" எனப் பேசியிருந்தார்.
இதனை விமர்சித்திருக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மோடிஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு இவற்றுக்கு பதில் கூறுங்கள்:
1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்?
2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
3. கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்?
இந்தியாவின் கௌரவத்தை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.