குவாட் நாடுகள்
குவாட் நாடுகள் web
இந்தியா

சிட்னியில் ஆக.11ல் தொடங்குகிறது குவாட் அமைப்பின் மலபார் கடற்படை பயிற்சி! என்ன செய்ய போகிறது சீனா?

Jayashree A

அமெரிக்கா, ஆஸ்திரேலியா இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் ஒன்றாக இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளன. தங்களுக்குள் கடற்படை பயிற்சிகளை இந்த நாடுகள் மேற்கொண்டு வரும். இந்த கடற்படை பயிற்சிக்கு மலபார் கடற்படை பயிற்சி என்று பெயர். இதன் நோக்கம் கடற்படை பயிற்சி மட்டுமல்லாது, சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பது தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குவாட் நாடுகள் தங்களின் மலபார் கடற்படை பயிற்சியை ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிட்னியில் தொடங்க இருக்கிறது.

இந்த பயிற்சியினால், சீனாவின் அதிருப்தியை நிச்சயமாக இந்தியா எதிர்கொள்ளும். இந்நிலையில் ஆகஸ்ட் 11 முதல் 21 வரையிலான மலபார் பயிற்சியில், இந்தியா ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா, மல்டி- மிஷன், போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி மற்றும் பி-8ஐ நீண்ட தூர கடல் ரோந்து விமானம் ஆகியவற்றை பயிற்சிக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா அதன் பங்கிற்கு, அதன் கப்பலான எச் எம் ஏ எஸ் பிஸ்பேன் மற்றும் பே கிளாஸ் தரையிறங்கும் கப்பல் HMAS choules-ஐ களமிறக்குகிறது.

HMAS choules

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை பயிற்சிக்காக தலா ஒரு போர்க்கப்பலை அனுப்பியுள்ளன. ஜப்பானைத் தவிர, மற்ற மூன்று நாடுகளும் மூன்று விமானங்களை பயிற்சிக்கு அனுப்ப உள்ளது.

1992ம் ஆண்டு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மட்டுமே வருடாந்தர மலபார் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்பொது ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவும் வருடாந்தர மலபார் பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக இந்த ஆண்டு நடத்தப்படும் மலபார் பயிற்சியில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வான், மேற்பரப்பு மற்றும் துணை மேற்பரப்பு செயல்பாடுகளுடன் இணைந்த சிக்கலான நிலை அதிகமாக இருக்கும்.

ஐ.என்.எஸ் கொல்கத்தா

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மார்ச் மாதம் டெல்லிக்கு வருகை தந்த பொழுது, “இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் எங்களது நாட்டின் அணுகுமுறையில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்தியா மற்ற மூன்று நாடுகளுடன் ஏற்கனவே ராணுவ தளவாட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த இருபது வருடங்களில் அமெரிக்காவுடன் ஒரு விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியா உருவாக்கி உள்ள அதே வேளையில், இப்பொழுது ஜப்பான் மற்றும் ஆஸ்திரிலேயாவுடனான இருதரப்பு இராணுவ உறவுகளையும் இந்தியா சீராக விரிவுபடுத்தி இருக்கிறது.