கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் பெட்ரோலில் எத்தனாலைக் கலக்க கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 2014-ஆம் ஆண்டு பெட்ரோலில் 1.5 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த விகிதம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வந்தது.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட மத்திய அரசு முடிவு செய்த நிலையில், 4 ஆண்டுக்கு முன்னதாகவே, அதாவது 2026-ஆம் ஆண்டே இந்த இலக்கை மத்திய அரசு எட்டியது. இதன்படி, ஒரு லிட்டர் எரிபொருளில் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதாகவும் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதோடு, விரைவில் பெட்ரோலில் எத்தனால் அளவை 22 சதவீதம் முதல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ”தற்போதைய சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பை 20 சதவீத வரம்பிற்கு மேல் உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், ”எதிர்காலத்தில் எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது பற்றி யோசித்தாலும், அது உடனடியாக அமலுக்கு வராது என்றும், விரிவான அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தி, வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியபின்னரே அமலுக்கு வரும்? என்றும் அவர் கூறியுள்ளார்.